138 வழக்குகள் ரூ.4¼ கோடிக்கு சமரச தீர்வு


138 வழக்குகள் ரூ.4¼ கோடிக்கு சமரச தீர்வு
x
தினத்தந்தி 8 July 2023 10:28 PM IST (Updated: 9 July 2023 3:39 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 138 வழக்குகள் ரூ.4¼ கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 235 பேர் பயனடைந்தனர்.

திருப்பூர்

மக்கள் நீதிமன்றம்

தாராபுரத்தில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆணைப்படி திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் குழுவின் உத்தரவுப்படி தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்ட சட்டப்பணிக்குழு தலைவரும் மற்றும் சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு தலைமை தாங்கினார்.

குற்றவியல் நடுவர் எஸ்.பாபு முன்னிலை வகித்தார். அப்போது தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 17, உரிமையியல் வழக்கு 37, குற்றவியல் சிறு வழக்குகள் 43, ஜீவனாம்ச வழக்கு 2, குடும்ப வன்முறை வழக்கு, செக் மோசடி 2 வழக்குகள் உள்பட 138 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

ரூ.4¼ கோடிக்கு சமரச தீர்வு

அதில் 138 வழக்குகளும் மொத்தம் ரூ.4 கோடியே 25 லட்சத்து 83 ஆயிரத்து 160 மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகள் மூலம் 235 பயனாளிகள் பயனடைந்தனர். அப்போது வழக்கறிஞர் எஸ்.டி.சேகர், வழக்கறிஞர் சங்க செயலாளர் எம்.ஆர்.ராஜேந்திரன், வழக்கறிஞர் வி.ஆர்.பிரபாகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இப்பணியை வட்ட சட்டப்பணிக்குழு நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


Next Story