உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி - எடப்பாடி பழனிசாமி
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை சட்டசபையில் பேச அனுமதிக்காததை கண்டித்து, அ.தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள், இன்று ஒரு நாள் வள்ளூவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த நிலையில், போலீசார் அனுமதி மறுத்தனர்.
தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. எம்எல்ஏ.,க்கள் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டனர். அங்கு அவர்கள் தடுப்புகாவலில் வைக்கப்பட்டனர். அங்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
உண்ணாவிரதத்தை தண்ணீர் குடித்து நிறைவு செய்தார் எடப்பாடி பழனிசாமி. மாலை 5 மணி அளவில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கபட்டனர்.
இந்த நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலைக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. அமைதி வழியில் போராட்டம் நடத்த முனைந்த கழகத்தினர் மீது காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவிவிட்ட மு.க.ஸ்டாலின் தலைமையிலான சர்வாதிகார ஆட்சியை மக்களிடம் தோலுரித்துக் காட்டும் வகையில் சென்னை முதல் குமரி வரை அனைத்து தொண்டர்களின் ஒற்றுமைக்கு சிரம் தாழ்த்தி வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
உறுதி! உழைப்பு!! உயர்வு!!! என்பதை தாரக மந்திரமாக கொண்டு, மக்களின் துணையோடு இந்த கொடுங்கோல் ஆட்சியை அகற்ற விரைவில் அம்மாவின் நல்லரசை அமைப்போம். என்று தெரிவித்துள்ளார்.