இந்தியாவின் சிறந்த கைவினைப் பொருளாக தஞ்சாவூர் கலைத்தட்டு தேர்வு
மத்திய அரசு இணையதளம் மூலம் நடத்திய பொது வாக்கெடுப்பில் இந்தியாவின் சிறந்த கைவினைப் பொருளாக தஞ்சாவூர் கலைத்தட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் கைவினை கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசு இணையதளம் மூலம் நடத்திய பொது வாக்கெடுப்பில் இந்தியாவின் சிறந்த கைவினைப் பொருளாக தஞ்சாவூர் கலைத்தட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் கைவினை கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொது வாக்கெடுப்பு
தஞ்சை மாவட்டத்தில் தலையாட்டி பொம்மை, வீணை, ஓவியம், திருபுவனம் பட்டு, கருப்பூர் கலம்காரி ஓவியங்கள், கலைத்தட்டுகள், நெட்டி வேலைப்பாடுகள், சுவாமிமலை ஐம்பொன் சிலைகள், நாச்சியார்கோவில் குத்துவிளக்குகள், நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் ஆகிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் சிறந்த பொருட்களை தேர்வு செய்வதற்காக மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் கடந்த ஒரு மாத காலமாக பொது வாக்கெடுப்பு இணையதளம் மூலம் நடந்தது. இந்த போட்டியில் இந்தியாவில் புவிசார் குறியீடு பதிவு பெற்ற 475 பொருட்கள் பங்கு பெற்றன.
தஞ்சாவூர் கலைத்தட்டு முதலிடம்
இதில் கைவினைப் பொருட்கள், விவசாயப் பொருட்கள், இயற்கை பொருட்கள், உற்பத்தி பொருட்கள், உணவு பொருட்கள் என ஐந்து வகையான பொருட்கள் இடம்பெற்றது. இவற்றில் அதிக வாக்குகளை பெற்று கைவினைப் பொருளுக்கான பிரிவில் தஞ்சாவூர் கலைத்தட்டு முதலிடத்தை பெற்றுள்ளது.
இதையடுத்து கைவினை பொருட்களுக்கான மேம்பாட்டு அமைச்சகத்திடம் அதற்கான சான்றிதழ் மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
ஐம்பொன்னால் உருவாக்கப்படுகிறது
இது குறித்து அறிவுசார் சொத்துரிமை வக்கீல்கள் சங்க தலைவரும், புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்களின் மேற்பார்வை அலுவலருமான சஞ்சய்காந்தி கூறும்போது, தஞ்சாவூர் கலைத்தட்டு என்பது எந்த ஊரிலும் செய்ய முடியாத கலைநயமிக்க ஐம்பொன்னால் உருவாக்கப்படும் கலைத்தட்டாகும்.
தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னர் காலத்தில் இந்த கலைத்தட்டு வடிவமைக்கப்பட்டது. தஞ்சாவூரில் உள்ள கைவினைக் கலைஞர்களின் கை வண்ணத்தில் இந்த தட்டு உருவாக்கப்படுகிறது.
கைவினை கலைஞர்கள் மகிழ்ச்சி
தஞ்சையில் தற்போது 250 பேர் இந்த கலைத்தட்டுகளை உற்பத்தி செய்து தஞ்சையின் புகழை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றனர். கலைநயமிக்க தஞ்சாவூர் கலைத்தட்டுக்கு 2006-ம் ஆண்டு புவிசார் குறியீடு பதிவுக்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2007-ம் ஆண்டு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்தது. இதையடுத்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் பெற்றுத் தரப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் பத்து பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதில் தஞ்சாவூர் கலைத் தட்டு தேசிய அளவில் சிறந்த கைவினைப் பொருளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது, தஞ்சாவூர் கைவினை கலைஞர்களுக்கு கிடைத்த பாராட்டும், கவுரவமும் ஆகும் என்றார்.
இந்தியாவில் சிறந்த கைவினைப் பொருளாக தஞ்சாவூர் கலைத்தட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளதால் கைவினை கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.