தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் தங்கத்தேர் பவனி கோலாகலமாக தொடங்கியது...!


தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் தங்கத்தேர் பவனி கோலாகலமாக தொடங்கியது...!
x
தினத்தந்தி 5 Aug 2023 3:48 AM GMT (Updated: 5 Aug 2023 5:57 AM GMT)

உலகப் பிரசித்தி பெற்ற இப்பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்டு 5ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் தங்கத்தேர் பவனி கோலாகலமாக தொடங்கியது. உலகப் பிரசித்தி பெற்ற இப்பேராலயத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்டு 5ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுத் திருவிழா ஜூலை 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இந்தத் திருவிழா நாட்களில் உலக நன்மை, உலக சமாதானம், கல்வி மேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான விசேஷ திருப்பலிகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான 10ம் நாள் நகர வீதிகளில் பனிமய மாதா அன்னையின் திருவுருவ தங்கத் தேர்ப்பவனி நடைபெறும்.

தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயம் ரோம் நகரின் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் தங்கத்தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், தூத்துக்குடி மறை மாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்தாண்டு தங்கத்தேர் பவனி நடக்கிறது. இந்த பேராலயத்தின் 441ம் ஆண்டு திருவிழா மற்றும் 16வது தங்கத் தேர் பவனி திருவிழாவாகும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்கத்தேர் பவனி இன்று நடைபெறுகிறது. தங்க தேர் திருப்பலியை கோவா உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினாய்க் பிலிப் நேரி நடத்துகிறார். தங்கத்தேர் பவனியை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார்.

தங்கத்தேர் பவனியை தொடர்ந்து தூத்துக்குடியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story