தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி- மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்


தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி- மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
x

தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி- மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழகம் இடையே வருகிற 16-ந் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

பெரம்பலூர்

வழியனுப்பும் விழா

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழகத்திற்கு, சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின்கீழ் செல்லும் மாணவர்களை வாழ்த்தி, வழியனுப்பும் விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாண்பமை வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து, மாணவர்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நம்முடைய கல்லூரியில் பயிலும் மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன், ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் மற்றும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் துறைகளை சார்ந்த 17 மாணவர்கள் மற்றும் 3 மாணவிகளை மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின்கீழ் அனுப்புகிறோம். இவர்கள் வருகிற 14 முதல் 20-ந்தேதி வரை மலேசியாவில் இந்த திட்டத்தின் கீழ் நடத்தப்படும் நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்வு உண்மையிலேயே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் கொடுக்கிறது. இது பலவழிகளில் நம்முடைய மாணவர்களுக்கு பலன் அளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

செயல்திறனை மேம்படுத்த...

தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் மூலம் உலகம் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் மாறி வருகிறது என்பதை நாம் அறிவோம். இந்த நவீன உலகத்தில் ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் துறையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துறையாக உருவெடுத்துள்ளது. இந்த துறையானது தொழிற்சாலைகளை மறுவடிவமைத்து, செயல்திறனை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. இதனை கருத்தில் கொண்டு மாணவர்களின் அறிவு மற்றும் திறன்களை வளர்க்க ரோபோடிக்ஸ் ஆர்ம் டெவெலப்மென்ட் அண்ட் கோடிங்கில் பயிற்சியும் மற்றும் ரோபோ காம்பிடிஷனும் இந்த திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் செல்லும் மாணவர்கள் இதில் கலந்துகொண்டு பயன் பெறுவார்கள். இதுபோன்ற திட்டங்கள் மாணவர்களுடைய செய்முறை அறிவு மற்றும் படைப்பாற்றலை அதிகரிக்க உதவும் இதன்மூலம் உலகம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்க உதவும்.

இந்த திட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று. நம்முடைய மாணவர்கள் பல்வேறு, சர்வதேச கலாசாரங்கள், மரபுகள், பழக்க வழக்கங்களை பற்றி அறிந்துகொள்ள இந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமைகிறது. சர்வதேச கலாசாரத்தை பற்றிய அறிவு உலகில் விலைமதிப்பற்ற சொத்தாக கருதப்படுகிறது. இன்றைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் வெற்றிக்கு மிக இன்றியமையாத தகுதியாக இது பார்க்கப்படுகிறது. மாணவர்களுடன் நமது கல்லூரியின் முதல்வர் இளங்கோவன் மற்றும் புலமுதல்வர் அன்பரசன் ஆகியோர் பயணம் மேற்கொள்கிறார்கள்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

மேலும் நமது தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரிக்கும் மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழகத்திற்கும் இடையே வருகிற 16-ந் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது. இது போன்ற சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டு ஆராய்ச்சியை மேம்படுத்தவும், கற்ப்பித்தல் மற்றும் கற்றலில் உள்ள சமீபத்திய புதிய வழிமுறைகளை பற்றி தெரிந்துகொள்ளவும், தொழில் நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இடையேயான இடைவெளியை குறைத்து, தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்கேற்ப, புதிய தரமான பாடத்திட்டங்களை வடிவமைக்கவும் உதவும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து இந்த திட்டத்திற்கான பயிற்சி கட்டணத்தை மாணவர்களின் நலன்கருதி வழங்கினார். இதில் கல்லூரியின் முதல்வர் இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினார். திறன் மேம்பாட்டு அதிகாரி சஷீதா, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வேல்முருகன், புலமுதல்வர்கள் அன்பரசன், சிவராமன், சண்முகசுந்தரம், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story