கோவில்களில் தைப்பூச திருவிழா


கோவில்களில் தைப்பூச திருவிழா
x
தினத்தந்தி 6 Feb 2023 12:30 AM IST (Updated: 6 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தைப்பூச திருவிழா நடந்தது.

திண்டுக்கல்

தைப்பூச திருவிழா

தைப்பூசத்தையொட்டி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் திண்டுக்கல் மேட்டுராஜக்காபட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பால், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாலையில் சுவாமியின் வீதிஉலா நடந்தது. திண்டுக்கல் கந்தக்கோட்டம் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தது.

போடிநாயக்கன்பட்டி காளியம்மன்கோவிலில் தைப்பூசத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது. திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமலைக்கேணி

நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சாமிக்கு பால், பழம், சந்தனம், இளநீர், பன்னீர், தயிர், விபூதி, தேன், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை அபிேஷகங்கள் நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. திண்டுக்கல், நத்தம், சாணார்பட்டி, செந்துறை உள்பட பல பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் புனித தீர்த்தத்தில் நீராடி விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். காமாட்சி மவுன குரு ஜீவசமாதி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சாமி சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இங்கும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கொங்கர்குளம்

நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கொங்கர்குளத்தில் உள்ள ஆதிருத்ரா லிங்கேஸ்வரர், மீனாட்சி அம்மாள் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சன்னதியில் 2-ம் ஆண்டு தைப்பூசத்தையொட்டி 108 சங்கு அபிஷேகமும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் பொங்கல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் அன்னதானமும் நடைபெற்றது.

விழாவில் நிலக்கோட்டை கொங்கர்குளம், அக்கரகாரப்பட்டி, கொக்குப்பட்டி, கட்டகூத்தன்பட்டி, மன்னவராதி, துள்ளுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கொங்கர்குளம் கிராம மக்களும், கோவில் பூசாரிகளும் மற்றும் கோவில் நிர்வாகிகளும் செய்திருந்தனர்.

சடாஷர சண்முகநாதர் கோவில்

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கசியம்மாபட்டி கிராமம் ஸ்ரீரங்ககவுண்டன்புதூரில் கருப்பட்டி மலையில் உள்ள சடாஷர சண்முகநாதர் கோவிலில் தை பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

விழாவையொட்டி நேற்று முன்தினம் பூசாரி குப்பணகவுண்டர் இல்லத்தில் இருந்து சாமி ஆபரணப்பெட்டி ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று மகாகணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. பிறகு சடாஷர சண்முகநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.

அன்னதானம்

பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்து முன்னணி மாநில செயலாளர் வி.எஸ்.செந்தில்குமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். விழாவில் இந்து முன்னணி முன்னாள் மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பார்த்திபன், ஒட்டன்சத்திரம் நகர பொதுச்செயலாளர் சுரேஷ், இந்து இளைஞர் முன்னணி நகர தலைவர் ஹரிஹரன் மற்றும் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி கோவில் பூசாரி முருகேசன் 16 அடி நீளமுள்ள அலகு குத்தி கோவிலுக்கு வந்தார். ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தார்கள்.

விழாவில் இந்து முன்னணி மாநில செயலாளர் கூறுகையில், ஒட்டன்சத்திரத்தில் சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலைத்துறையினர் முறையாக ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி ஒட்டன்சத்திரத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மீது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட போலீசார் பொய்வழக்கு போட்டு வருவது கண்டனத்துக்குரியதாகும் என்றார்.

பாதாள செம்பு முருகன் கோவில்

ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நடந்தது. விழாவில் முருகனுக்கு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து முருகன் முத்துகள், பவளத்தால் ஆன உடை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் வெளியூர்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் காந்தி குன்றம் மலையின் மீது அமைந்துள்ள அருள்முருகன் கோவிலில் சிறப்பு யாக வேள்வி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மூலவர் அருள்முருகனுக்கு சந்தனம், பால், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அருள்முருகன் சிறப்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story