விழுப்புரம் கோர்ட்டில் சி பி சி ஐ டி போலீஸ் சூப்பிரண்டு சாட்சியம்


விழுப்புரம் கோர்ட்டில் சி பி சி ஐ டி போலீஸ் சூப்பிரண்டு சாட்சியம்
x

பெண் ஐ பி எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் சி பி சி ஐ டி போலீஸ் சூப்பிரண்டு சாட்சியம்

விழுப்புரம்

விழுப்புரம்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ஆஜரானார். செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகவில்லை. அதனை தொடர்ந்து இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டும் தற்போது சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவருமான ஜியாவுல்ஹக், விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்கிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் தினகரன் குறுக்கு விசாரணை செய்தார். இந்த விசாரணை முடிந்த நிலையில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் குறுக்கிட்டு இவ்வழக்கின் புகார்தாரரின் கணவரான அருணாச்சல பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரி பார்த்திபனிடம் நாங்கள் குறுக்கு விசாரணைக்கு அனுமதி கேட்டு வாதிட்டார். அதற்கு அனுமதி வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, வழக்கின் விசாரணையை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பின் குறுக்கு விசாரணைக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி பார்த்திபனும் மற்றும் சாட்சியம் அளிப்பதற்காக இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள 19-வது சாட்சியான அப்போதைய மத்திய மண்டல ஐ.ஜி.யும் தற்போது ஊர்காவல்படை ஏ.டி.ஜி.பி.யுமான ஜெயராம், 22-வது சாட்சியான அப்போதைய கள்ளக்குறிச்சி மாவட்ட இன்ஸ்பெக்டரான சீனிவாசன் ஆகியோரும் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.


Next Story