எய்ம்ஸ் டாக்டர் மீண்டும் சாட்சியம்
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் எய்ம்ஸ் டாக்டர் மீண்டும் சாட்சியம் அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரும் கடந்த 2020-ம் ஆண்டில் சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்து இறந்தனர். இதுகுறித்து சி.பி.ஐ. இரட்டைக்கொலை வழக்குபதிவு செய்தது. இந்த கொலை வழக்கில் சாத்தான்குளத்தின் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த இரட்டைக்கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது. பல்வேறு முக்கிய சாட்சிகள் கோர்ட்டில் ஆஜராகி, சாட்சியம் அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு பொறுப்பு நீதிபதி தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் கைதான 9 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பின்னர் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பரிசோதனை செய்து, தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்வதற்காக எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழுவைச் சேர்ந்த டாக்டர் அரவிந்த்குமார் நீதிபதி முன்பு மீண்டும் நேற்று ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவரிடம் ஸ்ரீதர், செல்லதுரை, முருகன் ஆகியோர் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இதற்கு டாக்டர் அரவிந்த்குமார், பிரேத பரிசோதனை அறிக்கையில் ஜெயராஜும், பென்னிக்சும் இறந்ததற்கு அவர்களின் உடல்களில் இருந்த காயங்கள்தான் என கூறப்பட்டு இருந்தது. அதை நாங்கள் உறுதிப்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்.
பின்னர் இந்த வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.