சென்னை- கோவை வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி


சென்னை- கோவை வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி
x
தினத்தந்தி 30 March 2023 6:04 PM GMT (Updated: 30 March 2023 6:07 PM GMT)

சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. அந்த ரெயில் 5 மணி 38 நிமிடத்தில் கோவை சென்றடைந்தது. இந்த ரெயிலுக்கு காட்பாடி, ஜோலார்பேட்டையில் நிறுத்தம் இல்லை என்பதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திருப்பத்தூர்

வந்தே பாரத் ரெயில்

கடந்த நவம்பர் மாதம் 11-ந் தேதி சென்னை ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநில மைசூரு வரை செல்லும் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி பெங்களூரு ரெயில் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனையடுத்து தமிழகத்தில் வந்தே பாரத் ரெயில் சேவை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ரெயில் காட்பாடியில் மட்டுமே நின்று செல்கிறது. ஜோலார்பேட்டையில் நிறுத்தம் கிடையாது.

இந்த நிலையில் தமிழகத்தில் 2-வது வந்தே பாரத் ரெயில் சேவையை சென்னை ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வகையில் வருகிற ஏப்ரல் மாதம் 8-ந்் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் சென்னையில் இருந்து புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர் வழியாக கோயம்புத்தூர் வரை இரு மார்க்கமாகவும் இயக்கப்படுகிறது.

சோதனை ஓட்டம்

இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. காலை 5.40 மணியளவில் சென்னை ரெயில் நிலையத்தில் உள்ள 2 ஏ பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டு காலை 8 மணியளவில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது பிளாட்பாரம் வழியாக சேலம் நோக்கி சென்றது. காலை 9.15 மணியளவில் சேலம் சென்றடைந்தது. அங்கு 2 நிமிடம் நின்று 9.17 மணியளவில் புறப்பட்டு 10.05 மணியக்கு ஈரோடு ரெயில் நிலையத்தை அடைந்தது.

அங்கு 2 நிமிடம் நின்று திருப்பூர் நோக்கி புறப்பட்டது. 10.45 மணியளவில் திருப்பூர் ரெயில்நிலையத்தை சென்றடைந்தது. அங்கு பிறகு 2 நிமிடம் நின்று கோயம்புத்தூர் நோக்கி புறப்பட்டு 11.40 மணியளவில் கோயம்புத்தூர் சென்றடைந்தது.

இந்த வந்தே பாரத் ரெயிலில் ஒரு டிரைவர் மற்றும் உதவி டிரைவர் பணியில் இருந்தனர். மேலும் ரெயில்வே அதிகாரிகள் உடன் சென்றனர். மீண்டும் கோயம்புத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 12.40 மணியளவில் புறப்பட்டு திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு 1.20 மணிக்கு வந்தடைந்தது. அதன் பிறகு 2 நிமிடம் நின்று 1.22 மணியளவில் புறப்பட்டு ஈரோடு ரெயில் நிலையத்துக்கு மதியம் 2.2 மணியளவில் சென்றடைந்தது. அங்கு 2 நிமிடம் நின்று 2.4 மணியளவில் புறப்பட்டு 2.54 மணிக்கு சேலம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து 2.56 மணியளவில் புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக மாலை 4.25 மணியளவில் நிற்காமல் சென்னை நோக்கி சென்றது. மாலை 6.40 மணியளவில் சென்னையை சென்றடைந்தது.

இதன் மூலம் கோவை - சென்னை வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. அந்த ரெயில் 5 மணி 38 நிமிடத்தில் கோவை சென்றடைந்தது.

வந்தேபாரத் ரெயில் சேவை குறித்து சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா கூறியதாவது:-

சோதனை ஓட்டம் வெற்றி

தற்போது 8 பெட்டிகளுடன் வந்தேபாரத் ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு 22 நிமிடத்துக்கு முன்னதாக கோவை வந்து சேர்ந்தது. இந்த ரெயில் பெட்டிகள் அனைத்தும் முழுக்க, முழுக்க குளிர்சாதன வசதி கொண்டது. 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட இந்த ரெயிலில் 536 பயணிகள் பயணம் செய்யலாம். பிரதமர் மோடி 8-ந்தேதி இந்த ரெயிலை தொடங்கி வைக்கிறார்.

அப்போது கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கு வரும்போது 5 இடங்களில் மட்டும் இந்த ரெயில் நிற்கும். 130 கிலோ மீட்டர் வேகத்துக்குள் இயக்கப்படும். சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

காட்பாடி, ஜோலார்பேட்டையில் நிறுத்தம் இல்லை

இந்த வந்தேபாரத் ரெயிலுக்கு ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடியில் நிறுத்தம் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகி உள்ளனர்.


Next Story