சென்னையை கலக்கிய பயங்கர கொள்ளையன் கைது
சென்னையை கலக்கிய பயங்கர கொள்ளையன் கைது செய்யப்பட்டார். அவர் 3 பேரை கொடூரமாக கொன்று ஆற்றில் புதைத்த வழக்கில் சிறைக்கு சென்றவர் என்ற தகவல் தெரியவந்துள்ளது.
சென்னை,
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் இளங்கோ (வயது 26). அண்ணாநகர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் நடந்த 9 கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட பயங்கர கொள்ளையன்.
கடந்த ஒரு வருடமாக போலீசாரின் கையில் சிக்கவில்லை. ஆனால் தைரியமாக சென்னைக்குள் நுழைந்து கொள்ளை அடித்து வந்தார். இளங்கோவை கைது செய்ய போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார்.
அதன்பேரில் கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா மேற்பார்வையில், எழும்பூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இசக்கிபாண்டியன் தலைமையில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.
பெங்களூருவில் கைது
இந்த தனிப்படை போலீசார் கொள்ளையன் இளங்கோவை பெங்களூரு சென்று அதிரடியாக கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது போலீசாரையே அதிரவைத்த திடுக்கிடும் தகவல் வெளியானது. கொள்ளையன் இளங்கோ 3 பேரை கொலை செய்து ஆற்று மணலில் புதைத்த கொடுங்குற்றவாளி என்பது தெரியவந்தது.
கொன்று புதைப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்றில் கொலை செய்யப்பட்ட 3 பேரையும் புதைத்துள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு இந்த படுபாதக கொலைகளை இளங்கோ தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்துள்ளார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளங்கோ சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் சென்னைக்கு வந்துள்ளார். சென்னையை கடந்த ஒரு வருடமாக கலக்கி உள்ளார்.
தற்போது போலீசாரிடம் சிக்கி உள்ளார். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இப்படி படுபாதக கொலை-கொள்ளையில் துணிச்சலாக ஈடுபடும் கொள்ளையன் இளங்கோவை ஜாமீனில் வெளிவர விடாமல் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.