மாதவரம் அருகே பஞ்சு மெத்தை குடோனில் பயங்கர தீ விபத்து - தீயணைப்பு வீரர்கள் 5 மணிநேரம் போராடி அணைத்தனர்
மாதவரம் அருகே பஞ்சு மெத்தை குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை பெரிய சேக்காடு பெருமாள் கோவில் தெரு அருகே ஜி.பி.சி.கார்டன் உள்ளது. இந்த பகுதியில் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த நிரூபன்(வயது 47) என்பவர் சுமார் 5 ஆயிரம் சதுர அடியில் கட்டில், பஞ்சு மெத்தைகள் வைக்கும் குடோன் நடத்தி வருகிறார்.
இந்த குடோனில் மொத்தமாக கட்டில், மெத்தைகள் வாங்கி இருப்பு வைக்கப்பட்டு மாதவரம், மணலி, வியாசர்பாடி, பெரம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள இவரது கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த குடோனில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் திடீரென புகை வந்தது. சிறிது நேரத்தில் குடோனில் தீப்பிடித்து எரிந்தது. பஞ்சு மெத்தைகள் என்பதால் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடோன் காவலாளி மாதவரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைக்க முயன்றனர். ஆனால் பஞ்சு மெத்தைகள், மரகட்டில்கள் என்பதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதையடுத்து சென்னை புறநகர் மாவட்ட தீயணைப்பு அதிகாரி தென்னரசு தலைமையில் மணலி, செங்குன்றம், செம்பியம், வண்ணாரப்பேட்டை உள்பட 8 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 80-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரக்கட்டில்கள், பஞ்சு மெத்தைகள் தீயில் எரிந்து சாம்பலாயின. தீ விபத்து குறித்து மாதவரம் பால் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.