தேனி அருகே பரபரப்பு: அன்னதான நிகழ்ச்சியில் தி.மு.க.வினர் கோஷ்டி மோதல்


தேனி அருகே பரபரப்பு:  அன்னதான நிகழ்ச்சியில் தி.மு.க.வினர் கோஷ்டி மோதல்
x

தேனி அருகே தி.மு.க. சார்பில் நடந்த அன்னதான நிகழ்ச்சியில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் நாற்காலிகள் உடைக்கப்பட்டு, பேனர்கள் கிழிக்கப்பட்டன. தொண்டர் ஒருவர் காயம் அடைந்தார்.

தேனி

தி.மு.க.வினர் கோஷ்டி மோதல்

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள ஒரு சமுதாய கூடத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி இன்று அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் இந்த விழாவுக்கு ஏற்பாடு் செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வீரபாண்டி பகுதியை சேர்ந்த தி.மு.க.வினர் சிலர் வந்தனர். அவர்கள் தேனி தெற்கு ஒன்றிய நிர்வாகி ஒருவரை அன்னதான விழாவுக்கு ஏன் அழைக்கவில்லை என்று கூறி வாக்குவாதம் செய்தனர். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் இரு கோஷ்டிகளாக மோதி கொண்டனர். அப்போது அங்கு இருந்த நாற்காலிகளை சிலர் தூக்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். அப்போது நாற்காலிகள் உடைக்கப்பட்டன.

பேனர்கள் கிழிப்பு

மேலும் அப்பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகளின் புகைப்படங்களுடன் வைக்கப்பட்டு இருந்த விழா ஏற்பாடுகள் தொடர்பான பேனர்களையும் சிலர் கிழித்து எறிந்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.

இந்த கோஷ்டி மோதலில் கொடுவிலார்பட்டியை சேர்ந்த தி.மு.க. தொண்டர் பாண்டியன் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்காக அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியில் ஆம்புலன்சில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story