தென்காசியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்-கலெக்டரிடம், பழனிநாடார் எம்.எல்.ஏ. கோரிக்கை
தென்காசியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கலெக்டரிடம், பழனிநாடார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
சுரண்டை:
தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரனிடம், பழனிநாடார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு கொடுத்தார். அதில், கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவில் இல்லை. இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் இல்லை. இதனால் குற்றால அருவிகளில் நீர்வரத்து இல்லாததால் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் வறண்டு காணப்படுகிறது. கிணற்று நீரை நம்பி விவசாயம் செய்த விவசாயிகளும் கிணற்றிலும் தண்ணீர் இல்லாததால் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி தென்காசி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இரட்டைக்குளம் கால்வாய் திட்டம், ஜம்பு நதி கால்வாய் திட்டம் போன்ற திட்டங்களை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
முன்னதாக சுரண்டை அருகே லட்சுமிபுரத்தில் ரூ.9.13 லட்சத்தில் புதிய ரேஷன் கடையை பழனிநாடார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், அச்சங்குன்றம் பஞ்சாயத்து தலைவர் வெங்கடேஸ்வரி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.