தென்காசி சத்யசாய் சேவா சமிதி ஆண்டு விழா
தென்காசி சத்யசாய் சேவா சமிதி ஆண்டு விழா நடந்தது.
தென்காசி பகவான் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியின் 47-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் 48-வது ஆண்டு தொடக்க விழா ஜெகன்நாத் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காலை 5 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம் ஆகியன நடைபெற்றன. 6 மணிக்கு பிரசாந்தி கொடி ஏற்றம் நடந்தது. 7.45 மணிக்கு சங்கர சதாசிவம் ருத்ரம் பாராயணம் செய்தார். பின்னர் சாய் பஜனை, சகஸ்ர நாம அர்ச்சனை மற்றும் மகிளா விபாக் சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சமிதியின் மூத்த நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சமிதியின் கன்வீனர் பத்மநாபன் ஆண்டறிக்கை வாசித்தார். இதைத்தொடர்ந்து பால விகாஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் நிர்வாகி செல்வராஜ் நன்றி கூறினார்.
பின்னர் மங்கள ஆரத்தியும், அதனை தொடர்ந்து நாராயண சேவையும் நடைபெற்றது. மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான பல்லக்கு ஊர்வலம் நடந்தது. பல்லக்கில் சத்ய சாய் பாபா மற்றும் சீரடி சாய்பாபா ஆகியோரது உருவப்படங்கள் வைக்கப்பட்டு அதனை பக்தர்கள் தூக்கி வந்தனர். அப்போது ஊர்வலத்தின் முன் பகுதியில் இலஞ்சி ஓம் பிரணவா ஆசிரம பாலவிகாஸ் குழந்தைகளும், அதனைத் தொடர்ந்து பெண்கள், பின்னர் ஆண்கள் ஆகியோர் சென்றனர். ஊர்வலம் சமிதியில் இருந்து புறப்பட்டு ெரயில்வே பீடர் ரோடு, ெரயில் நிலையம், எல்.ஆர்.எஸ்.பாளையம், கூலக்கடை பஜார் வழியாகச் சென்று இறுதியில் புறப்பட்ட இடத்தை அடைந்தது. ஊர்வலத்தில் பக்தர்கள் சாய் பஜனை பாடல்களை பாடினர். அங்கு மங்கள ஆரத்தி மற்றும் நாராயண சேவையுடன் விழா முடிவடைந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.