தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணி;கலெக்டர் அரவிந்த், விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணியை கலெக்டர் அரவிந்த், விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு செய்தனர்.
நாகர்கோவில்,
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணியை கலெக்டர் அரவிந்த், விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு செய்தனர்.
முதலுதவி சிகிச்சை மையம்
நாகர்கோவிலை அடுத்த வில்லுக்குறி, பள்ளியாடி, முன்சிறை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அரவிந்த் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
குமரி மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில் வில்லுக்குறி அருகாமையிலுள்ள மணக்கரை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.1.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அவசரகால முதலுதவி சிகிச்சை மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் இந்த பணியை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் பள்ளியாடி கால்நடை மருந்தகம் ஆய்வு செய்யப்பட்டு, கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த பதிவேடு- மருந்து இருப்புகள் குறித்து கேட்டறியப்பட்டது. கால்நடைகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ரூ.6½ கோடியில் வளர்ச்சி பணி
மேலும் பொதுப்பணித்துறை மூலம் ரூ.1.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் பள்ளியாடி சார் பதிவாளர் அலுவலகத்தையும், ரூ.3.05 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தையும், ரூ.1.15 கோடி மதிப்பில் முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடப்பணி என மொத்தம் ரூ.6.60 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
விஜய் வசந்த் எம்.பி.
அப்போது விஜய் வசந்த் எம்.பி.யும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பணியை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விவரத்தை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காலநிலை ஒத்துழைத்தால் விரைவில் துறைமுக புனரமைப்பு பணிகள் முடிக்கப்படும். அருகில் உள்ள பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்கும் முயற்சியும் விரைவில் தொடங்கும். கடந்த ஆட்சியில் மீனவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் பணிகள் செய்ததால் தான் பாதிப்பு ஏற்பட்டது. இந்த முறை மீனவ மக்களின் ஆலோசனை பெறப்பட்டே பணிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மீன்வளத்துறை செயற்பொறியாளர் சிதம்பர மார்த்தாண்டன், உதவி செயற்பொறியாளர் செல்வராஜன், துறைமுக இளநிலை பொறியாளர் சுடலை ஆண்டி, மீன்வளத்துறை இயக்குனர் விர்ஜில் கிராஸ், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான், மேற்கு மாவட்ட காங்கிரஸ் மீனவர் அணி தலைவர் கென்னடி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.