கும்பகோணம் சாரங்கபாணி கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலம் மீட்பு
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை சிலர் ஆக்கிரமிக்க முயன்றனர். இதையடுத்து நிலத்தை அதிகாரிகள் மீட்டு வேலி அமைத்தனர்.
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை சிலர் ஆக்கிரமிக்க முயன்றனர். இதையடுத்து நிலத்தை அதிகாரிகள் மீட்டு வேலி அமைத்தனர்.
ஆக்கிரமிக்க முயற்சி
கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற வைணவ கோவிலான சாரங்கபாணி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் கும்பகோணத்தை அடுத்த சேஷம்பாடி ஊராட்சி மூப்பக்கோவில் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நிலத்தை மீட்டு கோவில் நிர்வாகம் கையகப்படுத்த முடிவு செய்தது.
ரூ.2 கோடி மதிப்பு
அதன்படி நேற்று கோவில் செயல் அலுவலர்கள் சிவசங்கரி, கணேஷ்குமார், பிரபாகரன், இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் வெங்கடசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் மவுனீஸ்வரன், நில அளவையர் ரேணுகா ஆகியோர் அங்கு சென்று கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தினர். மேலும் அந்த நிலத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைத்து, கோவிலுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகை வைத்தனர்.
இந்த நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. நிலத்தை சிலர் ஆக்கிரமிக்க முயன்ற நிலையில் அதிகாரிகள் அங்கு தடுப்பு வேலிகள் அமைத்ததால், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் அங்கு கும்பகோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.