கவரிங் நகையாக மாறிய கோவில் தங்க நகை...அதிர்ச்சியில் பொதுமக்கள்...!
கடலூர்,
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மே.மாத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு, கிராமத்தில் உள்ள பெண்கள் ஒன்று சேர்ந்து 5 சவரன் தங்கச் செயின் மற்றும் தாலி வாங்கி இந்த கோவிலில் உள்ள அம்மன் சிலைக்கு அணிவித்தனர்.
அதன்பிறகு அந்த நகைகள் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கோவில் பூசாரியிடம் ஒப்படைக்கப்பட்டு, கோவிலில் உள்ள பாதுகாப்பு அறையின் பீரோவில் பத்திரமாக வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது அம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது என கிராம மக்கள் சார்பில் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, கோவில் பாதுகாப்பு அறையின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் நகைகளை கிராம மக்கள் பார்த்தபோது, அது கறுத்து, பொலிவிழந்து காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த நகைகளை சோதனை செய்தபோது, அது கவரிங் நகை என தெரியவந்தது.
இதையடுத்து, கவரிங் நகையை வைத்துவிட்டு தங்க நகைகளை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேப்பூர் காவல் நிலையத்தில் கிராம மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.