'கோவில் திருவிழாக்கள் பலத்தை நிரூபிக்கவே நடத்தப்படுகின்றன, உண்மையான பக்தி இல்லை' - சென்னை ஐகோர்ட்டு வேதனை
கோவில் திருவிழாக்களில் வன்முறை வெடிப்பது துரதிருஷ்டவசமானது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
சென்னை,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள ருத்ர மகா காளியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா வரும் 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி கோவில் அறங்காவலர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, கோவில் திருவிழாவை நடத்துவதில் இரு பிரிவினருக்கு இடையே பிரச்சினை இருந்து வந்ததாகவும், தாசில்தார் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கோவில் திருவிழாக்களை நடத்துவதில் இரு பிரிவினருக்கு இடையே பிரச்சினை ஏற்படுவது தொடர்பாகத் தினந்தோறும் வழக்குகள் விசாரணைக்கு வருவதாகவும், கோவில் திருவிழாக்கள் யார் பலம் வாய்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கவே நடத்தப்படுவதாகவும், உண்மையான பக்தி இல்லை என்றும் வேதனை தெரிவித்தார்.
கோவில் திருவிழாக்களில் வன்முறை வெடிப்பது துரதிருஷ்டவசமானது என்றும், இது போன்ற வன்முறைகளால் கோவில்கள் இருப்பது என்பதே அர்த்தமற்றதாகி விடுவதாகவும், இதற்குப் பதிலாகக் கோவிலை மூடிவிடலாம் என்றும் நீதிபதி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது போன்ற பிரச்சினைகளுக்காக காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரின் நேரம் வீணடிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட நீதிபதி, ருத்ர மகா காளியம்மன் கோவிலைப் பொறுத்தவரைத் திருவிழாவிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.
கோவில் திருவிழாவை அமைதியாக நடத்துவதைச் சம்பந்தப்பட்டவர்கள் வசம் விட்டுவிடுவதாகவும், ஏதேனும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் காவல்துறையினர் உடனடியாக தலையிட்டுச் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் கோவில் திருவிழாவையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.