கோவில் திருவிழா ஆலோசனை கூட்டம்
சிவகிரி தாலுகா அலுவலகத்தில் கோவில் திருவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது.
சிவகிரி:
சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரியில் வருகிற 29-ந் தேதி திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா அனைத்து சமுதாயத்தினர் சார்பிலும், பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா மற்றொரு சமுதாயத்தின் சார்பிலும் நடத்தப்படுகிறது. இவை சம்பந்தமான ஆலோசனை கூட்டம் சிவகிரி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சிவகிரி தாசில்தார் ஆனந்த் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். துணை தாசில்தார் வெங்கடசேகர், இந்து சமய அறநிலையத்துறையின் ராணி கருப்பாயி நாச்சியார் அறக்கட்டளையின் செயல் அலுவலர் கேசவராசன், சிவகிரி வருவாய் ஆய்வாளர் சுந்தரி உள்பட இருதரப்பை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பூக்குழி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் இரவு 10 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் எனவும், பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா நிகழ்ச்சிகளில் ஒன்றான மஞ்சள் பானை எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியை மட்டும் இரவு 10 மணிக்கு மேல் ஆரம்பித்து அமைதியான முறையில் ஊர்வலம் சென்று வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.