சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா; பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டியில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி சக்கம்பட்டி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு உள்ள தெப்பத்தில் நீராடி அக்னிசட்டி எடுத்து கோவிலுக்கு வந்து வழிபட்டனர். அதன்பிறகு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியபடியும், அக்னிசட்டி ஏந்தியபடியும் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமதிலகம் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர். ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராமலிங்கம் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆண்டிப்பட்டி தீயணைப்பு படையினர், பூக்குழி நிகழ்ச்சியின்போது பக்தர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர்.