பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா; நாளை தொடங்குகிறது


பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா; நாளை தொடங்குகிறது
x

பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை தொடங்குகிறது.

திண்டுக்கல்

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நாளை (புதன்கிழமை) காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. 7 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், 6 நாட்கள் சாயரட்சை பூஜைக்கு பின்பு சண்முகர் அர்ச்சனை, தீபாராதனை, சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது.

வருகிற 5-ந்தேதி திருவிழாவின் 6-ம் நாளில் யாகசாலையில் இருந்து பரணி தீபம் கொண்டு செல்லப்பட்டு, மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மறுநாள் 7-ம் நாளில் திருக்கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, விஸ்வரூப தரிசனம், சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 4 மணிக்கு சாய ரட்சை பூஜை நடக்கிறது. அதன்பின்னர் சண்முகர் அர்ச்சனை, தீபாராதனையை தொடர்ந்து 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதைத்தொடர்ந்து மலைக்கோவிலில் உள்ள நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றப்படும். 6 மணிக்கு மேல் வெளிப்பிரகாரத்தில் உள்ள தீப ஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றுதல், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


Next Story