உக்தவேதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
உக்தவேதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய உக்தவேதீஸ்வரர் கோவில் உள்ளது. தேவார பாடல் பெற்ற இக்கோவில், சுந்தரரின் தோல் நோய் நீக்கிய தலமாகும். இங்கு சித்திரை திருவிழா கடந்த 24-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. விழாவில் நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அப்போது சாமியும், அம்மனும் பட்டாடை உடுத்தி அணிகலன்கள் அணிந்து வெள்ளி ரத வாகனத்தில் கோவில் வெளிப்பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த திருமண மேடைக்கு திருமண கோலத்தில் எழுந்தருளினர். பின்னர் தேரடி சித்தி விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து மாலை மாற்றுதல் உள்ளிட்ட திருமண சடங்குகள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு தருமபுரம் கட்டளை தம்பிரான் முன்னிலையில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.