2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியத்தில் மிகவும் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் திருவிழா நடைபெறும். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. இதை தொடர்ந்து, இந்த ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதன்படி கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், பஞ்ச மூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்றது.
தேரோட்டம்
விழாவில் 9-ம் நாளான நேற்று சிகர திருவிழாவான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் உற்சவமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து மண்டகப்படி பூஜை நடந்தது. மாலை 3.45 மணிக்கு முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில், அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி, தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து, மாலை 5.45 மணிக்கு நிலையை வந்தடைந்தது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் பெரியபால மூப்பர் வகையறாவினர், ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். முன்னதாக திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.