ரத்தினகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சித்திரை திருவிழா
நாகை மாவட்டம் திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். காவிரி தென்கரை தலங்களில் 80-வது சிவத்தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் பஞ்சமூர்த்திகள் தேரில் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், கோவில் தக்கார் தனலெட்சுமி, செயல் அலுவலர் முருகன், திருப்பணி குழு தலைவர் ஸ்ரீகுமார் மற்றும் திருப்பணி குழுவினர், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
60 ஆண்டுகளுக்குப்பின் தேரோட்டம்
ரத்தினகிரீஸ்வரர் கோவில் தேர் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்னர் சிதிலமடைந்தது. இதன் காரணமாக தேரோட்டம் நடத்தப்படவில்லை. கடந்த 2021-ம் ஆண்டு புதிய தேர் வடிவமைக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. பின்னர் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் தேரோட்டம் நேற்று நடந்தது. 60 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.