ஆதிகும்பேஸ்வரர் கோவில் மாசிமக திருவிழா தேரோட்டம்
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் மாசிமக திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் மாசிமக திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
மாசிமக திருவிழா
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோவில் நகரமாகும். இங்கு பிரசித்திப்பெற்ற சிவன், பெருமாள் கோவில்கள் ஏராளம் உள்ளன. கும்பகோணத்தில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழா சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் ஒரே நேரத்தில் கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு கும்பகோணத்தில் உள்ள 6 சிவன் கோவில்களில் கடந்த மாதம் (பிப்ரவரி) 25-ந் தேதியும், 3 பெருமாள் கோவில்களில் 26-ந் தேதியும் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
4 தேர்கள்
கொடியேற்றத்தை தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் விநாயகர், முருகன் தேரோட்டமும், 11 மணிக்கு மேல் ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்மன் தேரோட்டமும் என மொத்தம் 4 தேரோட்டம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, 'கும்பேஸ்வரா கும்பேஸ்வரா' என்ற சரண கோஷத்துடன் வடம்பிடித்து தேரை இழுத்தனர். அப்போது தனித்தனி தேர்களில் அருள்பாலித்த ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்மன், விநாயகர், முருகனை வழிபட்டனர்.
போக்குவரத்து மாற்றம்
தேர்களுக்கு முன்னால் கோவில் யானை மங்கலம் சிறப்பு அலங்காரத்துடன் சென்றது. கேரள மாநிலத்தை சேர்ந்த குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடந்தது. கும்பேஸ்வரன் மேல வீதியில் தொடங்கிய தேரோட்டம் தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக மீண்டும் நிலையை அடைந்தது.
தேரோட்டத்தையொட்டி ஆயிரக்கணக்கான 4 வீதிகளிலும் திரண்டு இருந்ததால் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதில் அன்பழகன் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம், மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் உத்தரவின் பேரில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடக்கிறது.
எம்.ஜி.ஆர். சிலையை உரசி சென்ற தேர்
ஆதிகும்பேஸ்வரர் கோவில் கீழவீதியில் இருந்து தெற்கு வீதியில் தேர் திரும்பியபோது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். உருவச்சிலை மீது தேரில் கட்டப்பட்டிருந்த குதிரை பொம்மைகள் உரசின. இதில் எம்.ஜி.ஆர். உருவ சிலையில் கைவிரல் பகுதி உடைந்து கீழே விழுந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.