தொப்பூர் ஞானலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
நல்லம்பள்ளி:
தொப்பூர் சோதனைச்சாவடி பகுதியில் உள்ள ஞானலிங்கேஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோவில் பல லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜைகள் நடந்தன. பின்னர் மூலவர் சாமிகளுக்கு பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க, தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. பின்னர் கோவில் விமான கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார சேவை, மகா தீபாராதனை நிகழ்ச்சியும், சாமி திருக்கல்யாண வைபவமும் நடந்தது. இதில் தொப்பூர், சந்திரநல்லூர், டி.புதுார், உம்மியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.