வரலட்சுமி நோன்பையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பெண்கள் சாமி தரிசனம்


வரலட்சுமி நோன்பையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பெண்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 26 Aug 2023 12:30 AM IST (Updated: 26 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

வரலட்சுமி நோன்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கன்னிகா பரமேஸ்வரி அம்மன்

ஆவணி மாத பவுர்ணமி நாளுக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வரலட்சுமி நோன்பையொட்டி பெண்கள் வீடுகளை அலங்கரித்து நோன்பு கயிறு கட்டி விரதத்தை தொடங்கினர். பூஜை அறையில் கோலமிட்டு, தட்டில் அட்சதையை பரப்பி, கலசத்தை தயார் செய்து அம்மனை வரவேற்றனர். இவ்வாறு வரலட்சுமியை வழிபட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல்நலம் பெருகும் என்பது நம்பிக்கையாகும். மேலும் 8 வித செல்வங்களை தருவதுடன் தாலி பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குவார் என்பது ஐதீகமாகும். இதனால் பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை இருந்து வருகின்றனர்.

அதன்படி கிருஷ்ணகிரி பழையபேட்டை கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பெண்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். நெய் விளக்கேற்றி, பாராயண பாடல்களை பாடினர். வீட்டிற்கு வந்த சுமங்கலி பெண்களுக்கு வளையல்களை கொடுத்தனர். மேலும் சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்புகளைப் படைத்து அனைவருக்கும் வழங்கினார்கள். மேலும் கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதேபோல் பெண்கள் தங்கள் வீடுகளில் மகாலட்சுமியை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

அரசமரத்து மாரியம்மன்

பர்கூர் அரசமரத்து மாரியம்மன் கோவிலில் வரலட்சுமி நோன்பையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இயைடுத்து அம்மன் வளையல் மற்றும் காய்கறிகள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். பூஜையில் பெண்கள் சுமங்கலியாக வாழ வேண்டும் என்று சிறப்பு பூஜை செய்து மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story