தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது - சென்னையில் 105 டிகிரி பதிவானது
தமிழகத்தில் சென்னை, மதுரை உள்பட 10 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. சென்னையில் 105.26 டிகிரி வெயில் பதிவானது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர், நாகை, தஞ்சை, திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 10 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. சென்னையில் 105.26 டிகிரி வெயில் பதிவாகி வாட்டி வதைத்தது.
மழையானாலும் சரி, வெயிலானாலும் சரி சென்னைவாசிகளுக்கு எப்போதுமே தவிப்புக்கு மட்டும் பஞ்சம் இல்லை. அந்தவகையில் கோடை வெயில் தொடங்கிய காலத்தில் இருந்தே சென்னை மக்களின் தவிப்பு தொடங்கியது. இதற்கிடையில் 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்தரி வெயில்' காலம் தொடங்கியது. ஏற்கனவே கொளுத்தி எடுக்கும் வெயிலின் நடுவே கத்தரி வெயிலின் கொடூரம் எப்படி இருக்குமோ... என்று பயந்த மக்களுக்கு, கோடை மழை கொஞ்சம் ஆறுதலை ஏற்படுத்தியது.
அந்த ஆறுதலும் நீடிக்காத வகையில், வங்கக்கடலில் உருவான 'மோக்கா' புயல் காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பை விட இனி வரக்கூடிய நாட்களில் வெப்பத்தின் தாக்கம் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, மக்களுக்கு அதுவும் குறிப்பாக சென்னைவாசிகளுக்கு கூடுதல் கலக்கத்தை ஏற்படுத்தியது. அந்தவகையிலேயே சில நாட்களாகவே சென்னையில் வெயிலின் உக்கிரம் கொடூரமாக இருந்து வருகிறது.
சென்னையில் நேற்று வெயில் வறுத்து எடுத்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை அமைந்தது. பங்குனி வெயில் பல்லை காட்டி அடிச்சுட்டு இருக்கு என்று படத்தில் நடிகர் வடிவேல் சொல்வது போல, சித்திரை வெயில் சென்னையை சிதறடித்துவிட்டது என்றே சொல்லலாம். காலை 9 மணி முதலே வெயிலின் தாக்கம் மோசமாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரித்து கொண்டே இருந்தது.
பகல் 12 மணிக்கு மேல் வெயில் பட்டையை கிளப்பியது. தரையில் விழுந்த வெயிலின் கீற்று கண் கூசும் அளவு பிரகாசித்தது. இதனால் சாலையில் செல்வோர், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என அனைவருமே வெயிலில் குளித்தபடி பயணத்தை தொடர்ந்தனர். நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பது போல, எங்கேயாவது மர நிழல் இருக்குமா, சற்று இளைப்பாறலாமா? என்று அலை பாய்ந்து கொண்டிருந்தனர். அதேவேளை சாலையோரம் இருந்த ஜூஸ் கடைகள், இளநீர், சர்பத் கடைகள், பதனீர் கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக மொய்த்திருந்ததையும் பார்க்க முடிந்தது.
விடுமுறை நாட்கள் என்றாலே, வெளியே குடும்பத்துடன் குதூகலமாக 'ரவுண்ட்' செல்லும் சென்னைவாசிகள், நேற்று பகலில் வெயிலுக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கினர். ஏராளமான வீடுகளில் பகலிலும் நேற்று ஏ.சி. எந்திரம் ஓடிக்கொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது. பகல் பொழுது முடிய தொடங்கியதும், அடுத்த ஆயுதமாக அனல் காற்று வீச தொடங்கியது. இதனால் மதியம் 3 மணிக்கு மேல் அனல் காற்றுடன் கூடிய ஊமை வெயில் மக்களை வாட்டியது. மாலை 6 மணி கடந்தும் இதே நிலைமை தொடர்ந்ததால், ஒட்டுமொத்தமாக சென்னைவாசிகள் தவித்து போய்விட்டார்கள்.
அதேவேளை கடற்கரைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைகடலென திரண்டு குளிர்ந்த காற்றை எதிர்கொண்டனர். இப்போதே வெயில் இப்படி இருக்கிறதே, போக போக எப்படியெல்லாம் வாட்டி வதைக்க போகிறதோ... என சூரியனை திட்டி வருகிறார்கள்.
வேலூரில் அதிகபட்சமாக 106.7 டிகிரி வெயில் கொளுத்தியது
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெயில் நிலவரம் வருமாறு:-
சென்னை நுங்கம்பாக்கம் - 105.26 டிகிரி (40.7 செல்சியஸ்)
சென்னை மீனம்பாக்கம் - 105.08 டிகிரி (40.6 செல்சியஸ்)
கோவை - 96.44 டிகிரி 35.8 செல்சியஸ்)
குன்னூர் - 79.16 டிகிரி (26.2 செல்சியஸ்)
கடலூர் - 101.12 டிகிரி (38.4 செல்சியஸ்)
தர்மபுரி - 97.16 டிகிரி (36.2 செல்சியஸ்)
ஈரோடு - 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்)
கன்னியாகுமரி - 91.04 டிகிரி (32.8 செல்சியஸ்)
கரூர் - 104 டிகிரி (40 செல்சியஸ்)
கொடைக்கானல் - 76.46 டிகிரி (24.7 செல்சியஸ்)
மதுரை - 103.64 டிகிரி (39.8 செல்சியஸ்)
நாகை - 100.76 டிகிரி 38.2 செல்சியஸ்)
நாமக்கல் - 96.8 டிகிரி (36 செல்சியஸ்)
பாளையங்கோட்டை - 99.32 டிகிரி (37.4 செல்சியஸ்)
சேலம் - 99.86 டிகிரி (37.7 செல்சியஸ்)
தஞ்சை - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)
திருப்பத்தூர் - 96.8 டிகிரி (36 செல்சியஸ்)
திருச்சி - 102.74 டிகிரி (39.3 செல்சியஸ்)
திருத்தணி - 103.64 டிகிரி (39.8 செல்சியஸ்)
தொண்டி - 95.72 டிகிரி (35.4 செல்சியஸ்)
தூத்துக்குடி - 94.1 டிகிரி (34.5 செல்சியஸ்)
ஊட்டி - 80.24 டிகிரி (26.8 செல்சியஸ்)
வால்பாறை - 84.2 டிகிரி (29 செல்சியஸ்)
வேலூர் - 106.7 டிகிரி (41.5 செல்சியஸ்)