தேஜஸ் விரைவு ரெயில் தாம்பரத்தில் நின்று சென்றது..!


தேஜஸ் விரைவு ரெயில் தாம்பரத்தில் நின்று சென்றது..!
x

சென்னை எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று சென்றது.

தாம்பரம்,

சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, திருச்சி, திண்டுக்கல் ரெயில் நிலையங்கள் வாயிலாக மதுரை நோக்கியும், மறுமார்க்கமாக மதுரையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு சென்னை நோக்கியும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் வியாழக்கிழமைகளை தவிர, மற்ற அனைத்து நாட்களிலும் இந்த ரெயில் இயக்கப்படுகிறது

முதலில் இந்த ரெயில் சென்னை எழும்பூர், திருச்சி, கொடைரோடு (திண்டுக்கல்) வழியாக மதுரைக்கு சென்றது. பின்னர், திண்டுக்கல் மாவட்ட மக்கள் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தேஜஸ் ரெயில் நின்று செல்ல பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். இதையடுத்து கொடைரோட்டுக்கு பதிலாக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்தது. இதைத்தொடர்ந்து தேஜஸ் ரெயில் கூடுதலாக தாம்பரம் ரெயில் நிலையத்திலும் நின்று சென்றால், பலர் பயன் அடைவார்கள் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில், சென்னை எழும்பூர்-மதுரை இருமார்க்கத்திலும் செல்லும் (வ.எண்.22671, 22672) தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சோதனை அடிப்படையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரெயில்வே வாரியம் கடந்த இருதினங்களுக்கு முன் அறிவித்தது. இதனால் ரெயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து இன்று காலை 6 மணிக்கு புறப்பட்ட மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது. தாம்பரம் வந்த தேஜஸ் ரெயிலை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இன்றிலிருந்து 6 மாதத்துக்கு சோதனை அடிப்படையில் தாம்பரம் முனையத்தில் நின்று செல்லும் இந்த ரெயில் வருவாய் குறித்து நிரந்தரமாக நின்று செல்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.


Next Story