பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: நேரில் ஆஜரான 4 போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை
பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் நேரில் ஆஜரான 4 போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்றும் விசாரித்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பை உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
தற்போது, இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இன்ஸ்பெக்டர் உலகராணி, அம்பை, கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களுக்கு சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட சுபாஷ், அருண்குமார், வேதநாராயணன், சூர்யா ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பல்வீர்சிங் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 போலீசாரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள், போலீசார் உள்ளிட்டவர்களுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் பலர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அம்பை பகுதியில் இருந்து விசாரணைக்கு ஆஜராகாத பாதிக்கப்பட்ட 4 பேரின் வீடுகளுக்கு நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் பல்வீர்சிங்கின் கார் டிரைவர்களான போலீஸ்காரர்கள் விவேக், ஆண்ட்ரூஸ் மற்றும் தனி பாதுகாவலர்கள் (கன்-மேன்கள்) இசக்கிமுத்து, சதாம் உசேன் ஆகிய 4 போலீசார் நேற்று காலை 11.40 மணிக்கு நெல்லை சி.பி.சி.ஐ.டி. ஆர்கனைஸ்டு கிரைம் பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டார். இந்த விசாரணை சுமார் 3 மணி நேரம் நடந்தது.
பின்னர் வெளியே வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கூறுகையில், 'பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள், போலீசாா் என 30 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம்' என்றார். மேலும் இந்த வழக்கில் பல போலீசார் சேர்க்கப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.