பற்களை பிடுங்கிய விவகாரம்: அதிகாரி அமுதா முன் 10 பேர் ஆஜர்


பற்களை பிடுங்கிய விவகாரம்: அதிகாரி அமுதா முன் 10 பேர் ஆஜர்
x
தினத்தந்தி 18 April 2023 2:21 AM IST (Updated: 18 April 2023 3:26 AM IST)
t-max-icont-min-icon

பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 2-ம் கட்ட விசாரணைக்காக அதிகாரி அமுதா முன் 10 பேர் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தனர். தாலுகா அலுவலகத்தில் இருந்து அனைத்து போலீசாரும் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

அம்பை:

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளரான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. அவர் கடந்த 10-ந் தேதி அம்பை தாலுகா அலுவலகத்தில் தனது விசாரணையை தொடங்கினார். ஆனால் அன்று யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அவர் சென்னை புறப்பட்டு சென்றுவிட்டார்

2-ம் கட்ட விசாரணை

இந்த நிலையில் அதிகாரி அமுதா தனது 2-வது கட்ட விசாரணையை நேற்று, இன்று (செவ்வாய்க்கிழமை) அம்பை தாலுகா அலுவலகத்தில் வைத்து நடத்துவார் என்றும், இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஆஜராகி புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக அதிகாரி அமுதா நெல்லைக்கு வந்தார். அவர் நேற்று காலை 10 மணி அளவில் அம்பை தாலுகா அலுவலகத்திற்கு வந்து தனது விசாரணையை தொடங்கினார். இதனால் தாலுகா அலுவலகம் வருவாய்த்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

போலீசார் வெளியேற்றம்

மேலும் விசாரணைக்கு வருபவர்கள் போலீசாருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறலாம் என்பதால், தாலுகா அலுவலகத்தில் உளவுப்பிரிவு போலீசார் உள்ளிட்ட அனைத்து போலீசாரும் தாலுகா அலுவலகத்தில் இருந்து வெளியேறுமாறு வருவாய் துறையினர் உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அனைவரும் தாலுகா அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னரே அதிகாரி அமுதா தனது விசாரணை மேற்கொண்டார்.

10 பேர் ஆஜர்

இதையடுத்து பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி, விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார், அவரது தாயார் ராஜேஸ்வரி மற்றும் 16, 17 வயதுள்ள 2 சிறுவர்கள் ஆகிய 5 பேர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் விசாரணை அதிகாரி அமுதா முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

தொடர்ந்து நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பைச் சேர்ந்த வக்கீல் மகாராஜன் தலைமையில் சிவந்திபுரத்தைச் சேர்ந்த சகோதரர்கள் செல்லப்பா, மாரியப்பன், இசக்கிமுத்து, சிவந்திபுரத்தை சேர்ந்த மற்றொரு மாரியப்பன், விக்கிரமசிங்கபுத்தை சேர்ந்த வேதநாராயணன் ஆகியோரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

கொலை முயற்சி வழக்குப்பதிவு

இந்த சம்பவம் குறித்து வக்கீல் மகாராஜன் நிருபர்களிடம் கூறுகையில், பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர்சிங் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பதாக வந்த தகவல் வரவேற்கத்தக்கது. ஆனால் இது ஏதோ பேருக்காக போடப்பட்ட வழக்கு மாதிரி பிரிவுகள் உள்ளன. அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' என்றார்.

இதேபோல் மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் வக்கீல் ஹென்றி டிபென் நிருபர்களிடம் கூறுகையில், 'இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். வழக்கை சி.பி.ஐ., சி.பி.சி.ஐ.டி. போன்ற அமைப்புகளில் கொடுக்காமல் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்டு கண்காணிக்க வேண்டும்.

ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களுக்கு அந்த மாவட்ட கலெக்டர் தான் ெபாறுப்பு. இவ்வழக்கில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்ல இவர்களுக்கு மருத்துவ சான்று கொடுத்த அரசு டாக்டர்களையும் வழக்கில் சேர்க்க வேண்டும்' என்றார். இன்றும் (செவ்வாய்க்கிழமை) பாதிக்கப்பட்டவர்களிடம் அதிகாரி அமுதா விசாரணை நடத்த உள்ளார்.


Next Story