தனியார் மருத்துவமனை பெண் ஊழியரிடம் சங்கிலி பறிக்க முயன்ற வாலிபர்கள்
தனியார் மருத்துவமனை பெண் ஊழியரிடம் வாலிபர் சங்கிலியை பறிக்க முயன்றனர்.
சங்கிலி பறிக்க முயற்சி
திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி ராணி (வயது 40). இவர் உறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை 4.15 மணி அளவில் வேலை முடிந்து புத்தூர் உய்யகொண்டான் வாய்க்கால் கரையையொட்டி கல்லாங்காடு பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அதில் ஒருவர், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கிச்சென்று ராணியின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார். மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் அமர்ந்து இருந்தார். அந்தசமயம் அவர்களுக்கு பின்னால் காரில் வந்த ஒருவர், வாலிபர்கள் சங்கிலி பறிக்க முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தப்பி ஓட்டம்
உடனே தொடர்ச்சியாக காரில் ஹாரன் அடித்தபடியே நெருங்கி வந்தார். இதனால் அந்த வாலிபர் சங்கிலி பறிக்கும் முயற்சியை கைவிட்டு வேகமாக ஓடிச்சென்று மோட்டார் சைக்கிளில் ஏறினார். இதையடுத்து 2 வாலிபர்களும் தப்ப முயன்றனர். ஆனாலும் காரில் வந்த நபர் அவர்களை விடாமல் காரிலேயே துரத்தி சென்றார். பாரதிநகருக்குள் சென்றதும் மோட்டார் சைக்கிளின் பின்னால் வேகமாக மோதினார். இதில் 2 வாலிபர்களும் தடுமாறி கீழே விழுந்தனர்.
உடனே காரில் இருந்து இறங்கி அவர்களை பிடிக்க முயன்றபோது, அவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு ஆளுக்கொரு திசையில் தப்பி ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மர்ம நபர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து அவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்று விசாரித்து வருகிறார்கள்.
திருச்சியில் சினிமா காட்சி போல் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.