மடிப்பாக்கத்தில் கர்ப்பிணி மனைவிகளின் மருத்துவ செலவுக்காக திருடிய வாலிபர்கள்


மடிப்பாக்கத்தில் கர்ப்பிணி மனைவிகளின் மருத்துவ செலவுக்காக திருடிய வாலிபர்கள்
x

மடிப்பாக்கத்தில் கர்ப்பிணி மனைவிகளின் மருத்துவ செலவுக்காக வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

பூட்டை உடைத்து திருட்டு

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 1-ந் தேதி இவர், வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் மதுரை சென்றுவிட்டார். இதற்கிடையில் அவரது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா திரும்பி இருப்பதை லண்டனில் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் கண்டார். இது பற்றி ராம்குமாருக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக அவர் சென்னைக்கு வந்து பார்த்தார். அப்போது மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 1½ பவுன் தங்க நகை, 200 கிராம் வெள்ளி பொருட்கள், டி.வி. ஆகியவற்றை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இது பற்றி மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

2 பேர் கைது

மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் பிரங்க் டி ரூபன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி சம்பவம் தொடர்பாக பெருங்குடியை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 23), அவருடைய நண்பரான மற்றொரு ரஞ்சித் (23) ஆகியோரை கைது செய்தனர். ஏற்கனவே இவர்கள் 2 பேர் மீதும் தரமணி, வேளச்சேரி, துரைப்பாக்கம் போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. 2 பேரிடமும் போலீசார் மேலும் விசாரணை நடத்தினர்.

மருத்துவ செலவுக்காக

விசாரணையில், நண்பர்களான இவர்கள் 2 பேரின் மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமுற்று இருந்தனர். இருவருக்கும் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் தவித்தனர். இதனால் சரியான மருத்துவ சிகிச்சை பெற முடியாததால் ஒருவரின் மனைவிக்கு கரு கலைந்து விட்டது. அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

மற்றொருவரின் மனைவிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதனால் தங்கள் மனைவிகளின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் நண்பர்கள் இருவரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. கைதான 2 பேரிடம் இருந்தும் 4 கிராம் தங்க நகை, 100 கிராம் வெள்ளி, டி.வி., லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story