ஓசியில் சிகரெட் கொடுக்காததால் வாலிபர் குத்திக்கொலை


ஓசியில் சிகரெட் கொடுக்காததால் வாலிபர் குத்திக்கொலை
x

ஓசியில் சிகரெட் கொடுக்காததால் வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

எண்ணூர்,

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது 29). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் தனது தாய் பார்வதியை பார்க்க வந்தார்.

பின்னர் அவர், அருகில் உள்ள கடையில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான முகமது முஷீத் (24), நசருல்லா (27) ஆகியோர் மதுபோதையில் அங்கு வந்தனர்.

அவர்கள் பிரவீனிடம் ஓசியில் சிகரெட் கேட்டனர். அதற்கு தன்னிடம் சிகரெட் இல்லை என்று பிரவீன் கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

கத்தியால் குத்திக்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த முகமது முஷீத்தும், நசருல்லாவும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரவீனின் மார்பில் குத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த பிரவீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பிரவீன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து எண்ணூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு தலைமறைவாக இருந்த முகமது முஷீத், நசருல்லா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

முன்விரோதம்

கைதான இருவர் மீதும் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் எண்ணூர் போலீஸ் நிலையத்தில் உள்ளது. இவர்களுக்கும் கொலையுண்ட பிரவீனுக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் பிரவீனை பார்த்ததும் அவர்கள் ஓசியில் சிகரெட் கேட்டு மோதலில் ஈடுபட்டனர். அது கொலையில் முடிந்தது.

கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்திலும் கைதான 2 பேரிடமும் எண்ணூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story