செல்போன் பறித்த வாலிபர் கைது
செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 31). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் நின்று மனைவியுடன் போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் ராஜீவ்காந்தியின் செல்போனை பறித்து கொண்டு ஓடினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜீவ்காந்தி, அங்கு நின்ற ஆட்டோ டிரைவர் உதவியுடன் அந்த நபரை பிடித்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், திருச்சி சுப்பிரமணியபுரம் அண்ணாநகரை சேர்ந்த அகஸ்டின்கெவின் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
*திருச்சி பீமநகர் மேலகுயத்தெருவை சேர்ந்தவர் குபேரன் மகன் பாலசந்துரு (21). இவர் தனது மோட்டார் சைக்கிளை தென்னூர் ஹைரோடு பகுதியில் நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபர் சாவு
*திருச்சி செந்தண்ணீர்புரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் லூயிஸ் ஆண்டனி. இவரது மகன் லிவிங்ஸ்டன் (22). இவர் டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் புத்தக கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வேலை பார்த்து கொண்டிருந்த லிவிங்ஸ்டன் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தென்னூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
*திருச்சி பெரியமிளகுபாறை பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (40). இவரு க்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஹரிகிருஷ்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த செசன்சு கோா்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிளீனர் படுகாயம்
*லால்குடியை அடுத்த பரமசிவபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் ரேவந்திரராஜ் (28). லாரி கிளீனர். லால்குடி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பழமை வாய்ந்த கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியின் போது இடிக்கப்பட்ட கட்டிட மண்ைண ஏற்றி லாரியில் நிரப்பிக்கொண்டிருக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது லாரியின் பின்னால் நின்ற ரேவந்திரராஜ் மீது எதிர்பாராத விதமாக லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரேவந்திரராஜ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.