மாமனாரால் தாக்கப்பட்ட இளம்பெண் சாவு; உறவினர்கள் போராட்டம்-பரபரப்பு


மாமனாரால் தாக்கப்பட்ட இளம்பெண் சாவு; உறவினர்கள் போராட்டம்-பரபரப்பு
x

2-வது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மாமனாரால் தாக்கப்பட்ட இளம்பெண் உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

2-வது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மாமனாரால் தாக்கப்பட்ட இளம்பெண் உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

2-வது திருமணத்துக்கு முயற்சி

நெல்லை அருகே உள்ள இட்டேரியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 60). இவருடைய மகன் தமிழரசன். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி முத்துமாரி (28). தங்கராஜின் மனைவி இறந்து விட்டதால் 2-வது திருமணம் செய்வதற்கு முயற்சி செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தமிழரசன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவரிடம் வீட்டை தனது பெயருக்கு எழுதிக் கேட்டு தங்கராஜ் தகராறு செய்து வந்தார். ஆனால் அதற்கு தமிழரசன் மறுப்பு தெரிவித்தார். மேலும் தமிழரசன், முத்துமாரி ஆகியோர் சேர்ந்து தங்கராஜ் 2-வது திருமணம் செய்யக்கூடாது என்று கண்டித்து உள்ளனர். இதனால் தங்கராஜ் கடும் ஆத்திரம் அடைந்தார்.

இரும்புக்கம்பியால் தாக்குதல்

நேற்று முன்தினம் காலையில் தமிழரசன் அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த தங்கராஜ் திடீரென்று இரும்புக்கம்பியால் முத்துமாரி தலையில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் அவரது மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் தங்கராஜ் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

ஆஸ்பத்திரியில் சாவு

இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் முத்துமாரியை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் நள்ளிரவில் முத்துமாரி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

உறவினர்கள் போராட்டம்

இதற்கிடையே, இதுபற்றி தகவல் அறிந்த உறவினர்கள் நேற்று ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் அங்கு திரண்டு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருமகளை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற தங்கராஜை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுவரை முத்துமாரி உடலை வாங்கமாட்டோம் என்று கூறினர்.

இதை அறிந்த முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன் மற்றும் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருந்தபோதிலும் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டம் நடந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து போலீசார் ஏற்கனவே பதிவு செய்திருந்த கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து தங்கராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் ெநல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story