கணவருடன் இளம்பெண் தற்கொலை; நெருங்கி பழகிய வாலிபர் கூறிய குற்றச்சாட்டு காரணமா?


கணவருடன் இளம்பெண் தற்கொலை; நெருங்கி பழகிய வாலிபர் கூறிய குற்றச்சாட்டு காரணமா?
x

நெருங்கி பழகிய வாலிபர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறிய நிலையில் கணவருடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் சூரியகோடு முள்ளங்குழி விளையைச் சேர்ந்தவர் ஜான் ஐசக் (வயது 40). பிளம்பர். இவருடைய மனைவி சந்தியா (34). இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்தநிலையில் ஜான் ஐசக் மதுபோதைக்கு அடிமையாகி வேலைக்கும் சரிவர செல்லாமல் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் சந்தியா கடன் வாங்கி குடும்பத்தை நடத்தியுள்ளார்.

வாலிபர் குற்றச்சாட்டு

இந்தநிலையில் மணவாளக்குறிச்சி தட்டான்விளை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது தாயுடன், கோட்டூர்கோணம் கீழவிளையில் வசித்து வரும் சந்தியாவின் தாயார் காந்தியை நேற்றுமுன்தினம் இரவு சந்தித்து பேசியுள்ளார். அப்போது, உங்கள் மகள் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகி ரூ.30 லட்சம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக குற்றச்சாட்டை தெரிவித்தார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த காந்தி இதுதொடர்பாக கேட்பதற்காக சந்தியாவின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

வீட்டில் தம்பதி பிணம்

அப்போது வீட்டுக்குள் சந்தியா தூக்கில் தொங்கிய நிலையிலும், படுக்கையில் ஜான் ஐசக்கும் பிணமாக கிடந்தனர். அவரது உடல் அருகே விஷமும், மதுபாட்டிலும் கிடந்தன. இதனால் ஜான் ஐசக் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது. இதுபற்றி தகவலறிந்து வந்து குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த தற்கொலை குறித்து போலீசார் கூறுகையில், "சந்தியா தனக்கு ரூ.30 லட்சம் தர வேண்டும் என கூறிய வாலிபர், சந்தியாவையும் பணத்தை கேட்டு மிரட்டியிருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். எனவே அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். அதே சமயத்தில் தம்பதி தற்கொலை விவகாரத்தில் வேறு ஏதேனும் காரணம் இருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படும்" என்றனர்.


Next Story