கடன் தொல்லையால் வாடிக்கையாளர் போல் நடித்து நகை திருடிய இளம்பெண் கைது


கடன் தொல்லையால் வாடிக்கையாளர் போல் நடித்து நகை திருடிய இளம்பெண் கைது
x

கடன் தொல்லையால் வாடிக்கையாளர் போல் நடித்து நகை திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மேட்டு தெரு பகுதியில் நகை கடை செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை வாங்குவது போல வந்த டிப் டாப் உடை அணிந்த இளம்பெண் நகையை வாங்குவது போல் பல்வேறு நகைகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென உரிமையாளரை திசை திருப்பி 24 கிராம் எடையுள்ள 2 தங்கச்சங்கிலியை எடுத்துக்கொண்டு கடைக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த மொபட்டில் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றார்.

இதனை சற்றும் எதிர்பாராத கடை உரிமையாளர் உடனடியாக வெளியே துரத்தி செல்லும் முன் அவர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இது குறித்து கடை உரிமையாளர் அசோக், விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு அவரை வலைவீசி தேடி வந்தனர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு தேடியதில் அவர் வாலாஜாபாத் அடுத்த புளியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த காயத்ரி (வயது 25) என்பதும், அவர் நகை திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காயத்ரியை கைது செய்த விஷ்ணு காஞ்சீய போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் காயத்ரிக்கு கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால், வாங்கிய கடனை எப்படியாவது திருப்பி செலுத்தி விட வேண்டும் என்று நினைத்து, நகையை திருடியதாக தெரிவித்தார்.

இதை தொடர்ந்து போலீசார் காயத்ரியை காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறை யில் அடைத்தனர் மேலும் அவரிடம் இருந்து 2 தங்கச்சங்கிலிகளையும் கைப்பற்றினர்.


Next Story