உலகக்கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டிக்கான இந்திய அணிக்கு வீராங்கனைகள் தேர்வு
உலகக்கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டிக்கான இந்திய அணிக்கு வீராங்கனைகள் தேர்வு சின்னாளப்பட்டியில் நடைபெற்றது.
மராட்டிய மாநிலம் புனேயில் 6-வது உலகக்கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டிகள், அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்துகொள்கின்றன. அதேபோல் இந்திய அணி சார்பில் கலந்துகொள்ளும் பெண்கள் அணிக்கான வீராங்கனைகள் தேர்வு போட்டி, சின்னாளப்பட்டியில் ராஜன் உள்விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது.
இதில், தமிழகத்தின் சார்பில் திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த சுஷ்மிதா, கண்மணி, தியோஸ் ரீசாயினி, வாசிமா ஆகிய 4 மாணவிகளும், ராஜஸ்தான், மராட்டியம், அசாம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து 40 மாணவிகளும் கலந்துகொண்டனர். அப்போது இந்திய அணிக்கு 25 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பயிற்சி இதே மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சர்வதேச நடுவர் பிரேம்நாத் தலைமையில் பயிற்சியாளர்கள் மற்றும் ரோல்பால் தென்னிந்திய செயலர் சுப்பிரமணியம், தேர்வு பயிற்சியாளர்களான மராட்டியத்தை சேர்ந்த தேஜஸ்வினி, அமித்படேல், மோகினியாதவ், அபர்னா ஆகியோர் செய்திருந்தனர்.
இதுகுறித்து சர்வதேச நடுவரும், ரோல்பால் ஸ்கேட்டிங் மாஸ்டருமான பிரேம்நாத் கூறுகையில், இதுவரை நடைபெற்ற 5 உலகக்கோப்பைக்கான ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டிகளில் தமிழக அணி சார்பில் ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற மாண-மாணவிகள் 4 முறை தேர்வானார்கள். இந்த முறை நடைபெறும் உலகக்கோப்பைக்கான ரோல்பால் போட்டியில் இந்திய அணி சார்பில் கலந்துகொள்ள தமிழகத்தில் இருந்து 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.