மீனாட்சி ராமசாமி கல்லூரியில் ஆசிரியர் தின விழா
தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன் தலைமை தாங்கினார். இயக்குனர் ஆர்.ராசமாணிக்கம் முன்னிலை வகித்தார். கல்வியியல் கல்லூரி ஆலோசகர் வரதராசன், சிவகுருநாதன், குருநாதன், பழனியாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இதையடுத்து மூத்த பேராசிரியர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. பின்னர் அனைத்து ஆசிரியர்களுக்கும் பேனா வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கத்தில் தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன் பேசுகையில், ஆசிரியர்கள் மாணவர்களுடைய மனநிலையை புரிந்து கொண்டு கற்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு புரிகின்ற வகையில் ஆசிரியர்கள் தெளிவாக வகுப்பு எடுத்தல் வேண்டும். மாணவர்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களை போக்குகின்ற வகையில் ஆசிரியர்கள் விளங்க வேண்டும். ஆசிரியர்கள் ஒழுக்கம் உள்ளவர்களாகவும், நேர்மையானவர்களாகவும், கடமை தவறாதவர்களாகவும், கண்ணியமானவர்களாகவும் இருக்க வேண்டும். எந்த ஒரு பணியை கொடுத்தாலும் அந்த பணியை திறம்பட செய்கின்ற ஆற்றலை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் நூல்கள் வாசிப்பில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் உரிய இடைவெளி வேண்டும். மாணவர்களுடைய வெற்றிக்கு எப்பொழுதும் ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.