வேன் மோதி ஆசிரியர் சாவு
கரிவலம்வந்தநல்லூர் அருகே வேன் மோதி ஆசிரியர் இறந்தார்.
சங்கரன்கோவில்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சங்கரபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலையா மகன் மோகன்ராஜ் (வயது 22). இவர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான சங்கரபாண்டியபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள காரிசாத்தான் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த வேன் மோதி மோகன்ராஜ் காயமடைந்தார். இதில் காயமடைந்த மோகன்ராஜ் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.