ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று தொடங்குகிறது
நாமக்கல் மாவட்டத்தில் இன்று தொடங்க உள்ள ஆசிரியர் தகுதித்தேர்வை 8 மையங்களில் 16 ஆயிரத்து 764 பேர் எழுதுகின்றனர்.
தகுதித்தேர்வு
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் -2 தேர்வுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கி பேசியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட உள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் -2 தேர்வு இணையவழியில் கணினிகள் வழியாக 8 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத 16,764 பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர்.
இணையவழியில்...
குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனம், வெண்ணந்தூர் நாமக்கல் டிஜிட்டல் ஹப், திருச்செங்கோடு வித்ய விகாஸ் காலேஜ் ஆப் என்ஜினீயரிங் டெக்னாலஜி, தோக்கவாடி கே.எஸ்.ரங்கசாமி இன்ஸ்ட்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தோக்கவாடி கே.எஸ்.ரங்கசாமி காலேஜ் ஆப் டெக்னாலஜி, குமாரபாளையம் ஜே.கே.கே.என். காலேஜ் ஆப் என்ஜினீயரிங் டெக்னாலஜி, மல்லசமுத்திரம் மகேந்திரா பொறியியல் கல்லூரி, பாச்சல் ஞானமணி கல்வி நிறுவனங்கள் என 8 இடங்களில் இணையவழியாக கணினிகள் மூலம் தேர்வு எழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறும். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை தேர்வுகளுக்கு 7.30 மணிக்கும், மாலை தேர்வுகளுக்கு மதியம் 12.30 மணிக்கும் ஆஜராக வேண்டும். தேர்வு மையங்களில் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தேர்வு மைய வளாகங்களுக்குள் தேர்வர்கள் உடன் வருபவர்கள் எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இன்று முதல் 8-ந் தேதி வரை முதல் கட்டமாகவும், 10-ந் தேதி முதல் 14-ந் தேதி முடிய 2-ம் கட்டமாகவும் தேர்வுகள் நடைபெற உள்ளது. தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு பிறகும் மற்றும் மதியம் 1.30 மணிக்கு பிறகும் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பஸ்வசதி
தேர்வினை சிறப்பான முறையில் நடத்திட அனைத்துதுறை அலுவலர்களும் தங்களுக்கான பணிகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தேர்வு நாட்களில் தேர்வு மையங்களுக்கு செல்ல அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) பிரபாகரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரவி (இடைநிலை), கணேசன் (தனியார் பள்ளிகள்), பாலசுப்ரமணியன் (தொடக்க கல்வி) உள்பட காவல்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, அரசு போக்குவரத்துக்கழகம், தீயணைப்புத்துறை உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.