காதல் வலை வீசி தொழில் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி கில்லாடி ஆசிரியை ...!


காதல் வலை வீசி தொழில் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி கில்லாடி ஆசிரியை ...!
x

அப்போது தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடக்கூடாது என்றும் ஹேசல் ஜேம்சிடம் கூறியிருக்கிறார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

கோவை

மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 44). இவர் செம்பூர் ரெயில் நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு லோரேன் என்ற பெண்ணுடன் அவரது உறவினர் மூலமாக நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு லோரேனின் மூலமாக அவரது சகோதரி கோவை போத்தனூர் சத்ய சாய் நகர் பகுதியில் வசித்து வரும் ஹேசல் ஜேம்ஸ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மாடர்னாக ஆடை அணிந்து வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை ஹேசல் ஜேம்ஸ் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்ததும் ராஜேஷ்க்கு அவரை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஹேசல் ஜேம்ஸ் தான் திருமணம் ஆகாத பெண் என்று கூறி ராஜேசுடன் பழகி வந்துள்ளார். சிறிது நாட்கள் கழித்து தனக்கு திருமணமாகிவிட்டது என்றும் கணவர் இறந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இருந்த போதும் ராஜேஷ், அப்பெண்ணுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

அந்த சமயத்தில் திடீரென ஒரு நாள் ஹேசல் ஜேம்ஸ் தனது கணவர் இறக்கவில்லை என்றும் விவாகரத்து வழக்கு கோவை நீதிமன்றத்தில் இருப்பதாகவும் கூறி இருக்கிறார். ஆனாலும் அப்பெண்ணை விட்டு விலக மனமில்லாத ராஜேஷ், ஹேசல் ஜேம்ஸின் பேச்சில் மயங்கி அது ஒரு விஷயமே இல்லை என்று கூறி இருக்கிறார். மேலும் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தந்தையுடன் வசித்து வருவதால் தனக்கு நிறைய கஷ்டங்கள் இருப்பதாக கூறி இருக்கிறார். இதை நம்பிய ராஜேஷ் 90 ஆயிரம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ் தான் சொந்தமாக தொழில் செய்வதாகவும் அதற்கு உதவி செய்யுமாறு கூறியிருக்கிறார். இதனால் ராஜேஷ் 20 லட்சம் ரொக்கம், அழகு சாதன பொருட்கள், விலை உயர்ந்த செல்போன், ஸ்கோடா கார் ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளார்.

பொருட்கள், பணத்தை வாங்குவதில் மிகவும் கவனமாக செயல்பட்டு ஒவ்வொரு பொருளையும் தனது ஒவ்வொரு உறவினர் பெயர்களில் வாங்கியுள்ளார். இந்நிலையில் ஹேசல் ஜேம்ஸ்க்கு ராணுவ வீரர் ஜஸ்டின் என்பவருடன் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. மேலும் இதே போல பல ஆண்களிடம் ஹேசல் ஜேம்ஸ் பழகி வந்தது ராஜேஷ்க்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் இது குறித்து அப்பெண்ணிடம் கேட்டுள்ளார்.

அப்போது தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடக்கூடாது என்றும் ஹேசல் ஜேம்சிடம் கூறியிருக்கிறார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ் தொழிலதிபர் ராஜேஷ் உடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் தன்னுடைய பணத்தை திருப்பித் தருமாறு ராஜேஷ் கேட்டுள்ளார். அப்போது அப்பெண் பணத்தை திருப்பி தர முடியாது என்றும், பணத்தை திருப்பி கேட்டால் தான் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்வேன் என கூறி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ் மீண்டும் சில நாட்கள் கழித்து தனது பணத்தை கேட்டுள்ளார். அப்போது ஹேசல் ஜேம்ஸ் 20 லட்சம் ரூபாய் பணத்தை உனக்கு கொடுப்பதற்கு பதில் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் உன்னை கொல்வதற்கு ஆள் இருக்கிறது என கூறி மிரட்டி இருக்கிறார். இதனால் ராஜேஷ் அச்சடைந்து கோவைக்கு வந்து மாநகர போலீஸ் பாலகிருஷ்ணனிடம் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மும்பை தொழிலதிபர் ராஜேஷிடம் பழகி மோசடி செய்த ஹேசல் ஜேம்ஸ் குறித்து பல்வேறு தகவல்கள் கிடைத்தன. ஹேசல் ஜேம்சின் தந்தை ஜேம்ஸ் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராவார். தாய் கோவையில் உள்ள பிரபல பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஹேசல் ஜேம்ஸ் கல்லூரியில் படிக்கும் பொழுது கோவையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவரின் மகனுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது. தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ் குடும்பத்தார் காவல் அதிகாரியின் மகனை மதம் மாறக் கூறியுள்ளனர்.

இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வசித்து வருகின்றனர். மேலும் இவர்களுடைய விவாகரத்து வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஹேசல் ஜேம்ஸ் கோவையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிந்து அங்கிருந்து இவரது நடவடிக்கை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு போலீஸ் அதிகாரியின் மகன் தனது குழந்தையை பார்ப்பதற்காக போத்தனூரில் உள்ள ஹேசல் ஜேம்ஸ் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் அங்கிருந்தவர்கள் போலீஸ் அதிகாரியின் மகன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் தங்க நகைகளை பறித்துக் கொண்ட வழக்கு கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் மும்பை தொழிலதிபருடன் பேசி பழகி 20 லட்சம் ரூபாய் வரை பணம், கார் உள்ளிட்ட பொருட்களை வாங்கி ஹேசல் ஜேம்ஸ் ஏமாற்றியுள்ளார். மேலும் கோவையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜஸ்டின் என்பவருடன் பழகி அவரை திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் ஹேசல் ஜேம்ஸ் தனது முதல் கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து போத்தனூர் போலீசார் மும்பை தொழிலதிபர் ராஜேசை ஏமாற்றியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக பள்ளி ஆசிரியை ஹேசல் ஜேம்ஸ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story