ஆசிரியர் நியமனத்தேர்வை விரைந்து நடத்த வேண்டும்-மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில்மனு
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனத்தேர்வை விரைந்து நடத்த வேண்டும் என்று மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனத்தேர்வை விரைந்து நடத்த வேண்டும் என்று மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஷீபாஅமல்ராஜ் தலைமையில் அளித்த மனுவில், 2013, 2017, 2019, 2022, 2023-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று அரசாணை 149-ன்படி ஆசிரியர் நியமன தேர்வுக்கு தயாராகி வருகிறோம். அனைத்து அரசு அலுவலகங்களில் மதிப்பெண் அடிப்படையிலேயே வேலை வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரிய (பி.ஜி. டி.ஆர்.பி.) தேர்விலும் மதிப்பெண் முறையே பின்பற்றப்படுகிறது. அதனால் அரசாணை 149-ன்படி பணி நியமனம் செய்வதற்காக ஆசிரியர் நியமன தேர்வை விரைந்து நடத்த வேண்டும் என்று கூறி இருந்தனர்.
உரிமை தொகை
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஊராட்சி பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் நவநீதன் தலைமையில் அளித்த மனுவில், கடந்த 6 மாதங்களுக்கு மேல் ஊராட்சி பணியாளர்களின் சம்பளம் பெரும் பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக டேங்க் ஆபரேட்டர்களின் சம்பளம் ரூ.5 ஆயிரம்கூட கிடையாது. அதுவும் மாதம், மாதம் கிடைக்கவில்லை. இதனால் மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளின் குடிநீர் வழங்கும் டேங்க் ஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட செலவுக்கு திண்டாட வேண்டிய நிலை உள்ளது. மேலும் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு இல்லை என்ற செய்தி அதிர்ச்சியாக உள்ளது. டேங்க் ஆபரேட்டர்களின் ஊதியம் மதிப்பூதியம் ஆகும். எனவே வருமான அடிப்படையில் ஊராட்சிகளில் பணியாற்றும் டேங்க் ஆபரேட்டர்களின் குடும்ப பெண்களுக்கும் கலைஞரின் மகளிர் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
போலிபத்திரம்
திருச்சி புங்கனூர் பகுதி கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா தாயனூர் கிராமத்தில் உள்ள ரூ.3 கோடி சொத்தை சிலர் ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரம் மூலம் அபகரித்துள்ளனர். இது தொடர்பாக நில அபகரிப்பு தடுப்புபிரிவு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள். மேலும், ராணுவ வீரர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தையும் அபகரித்துள்ளனர். மேற்கண்ட இருவேறு சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.7 கோடியாகும். ஆகவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
லாட்டரி விற்பனை
பா.ம.க. மாநகர் மாவட்ட செயலாளர் திலீப்குமார் தலைமையில் அளித்த மனுவில், காந்திமார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தடை செய்யப்பட்ட கேரளாமாநில லாட்டரி விற்பனை அதிகமாக நடக்கிறது. இதனால் பலர் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே லாட்டரி விற்பனையில் ஈடுபடும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
.............பாக்ஸ்