மோட்டார் சைக்கிள், கார், ஆம்னி பஸ், லாரிவாகனங்களின் வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம்வாகனத்தொழில் சார்ந்தோர் கருத்து


மோட்டார் சைக்கிள், கார், ஆம்னி பஸ், லாரிவாகனங்களின் வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம்வாகனத்தொழில் சார்ந்தோர் கருத்து
x
தினத்தந்தி 16 Oct 2023 12:30 AM IST (Updated: 16 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள், கார், ஆம்னி பஸ், லாரி வாகனங்களின் வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம் வாகனத்தொழில் சார்ந்தோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தர்மபுரி

தமிழ்நாட்டில் அனைத்து வாகனங்களுக்கும் வரிகள் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. அதற்கான சட்ட மசோதா சில தினங்களுக்கு முன்பு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இதனால் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களுக்கும், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கும் வரி உயர்வதுடன், விலையும் உயர்கிறது.

முன்பு மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களுக்கு வாழ்நாள் வரியாக (லைப் டேக்ஸ்) 8 சதவீதம் பெறப்பட்டு வந்தது. தற்போது அது இரண்டு அடுக்கு முறையாக மாற்றப்பட்டு இருக்கிறது.

அதாவது ரூ.1 லட்சம் வரை விற்கப்படும் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு இனி 10 சதவீதம் வரியும், ரூ.1 லட்சத்துக்கு மேல் விற்கப்படும் மோட்டார் சைக்கிளுக்கு 12 சதவீதம் வரியும் வசூலிக்கப்படும்.

அதுபோல் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு இரண்டு அடுக்கு முறையில், அதாவது ரூ.10 லட்சம் வரையிலான ஒரு காருக்கு 10 சதவீதம் வரியும், ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ள கார்களுக்கு 15 சதவீதம் வரியும் பெறப்பட்டு வந்தது.

அது தற்போது நான்கு அடுக்கு முறையாக மாற்றப்பட்டு இருக்கிறது. அதன்படி ரூ.5 லட்சத்திற்கு கீழ் உள்ள கார்களுக்கு 12 சதவீதம் வரியும், ரூ.5 லட்சத்திற்கு மேல் ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீதம் வரியும், ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரையிலான கார்களுக்கு 18 சதவீதம் வரியும், ரூ.20 லட்சத்திற்கு மேல் உள்ள கார்களுக்கு 20 சதவீதம் வரியும் இனி வசூலிக்கப்படும்.

இதுதவிர பசுமை வரி, சாலை பாதுகாப்பு வரி போன்றவைகளும் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆம்னி பஸ்கள், கல்வி நிறுவன வாகனங்கள், சரக்கு வாகனங்கள் போன்றவைகளுக்கும் வரிவிகிதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இந்த வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து வாகனத்துறையைச் சேர்ந்த சிலர் கூறிய கருத்துகள் வருமாறு:-

வரிச்சலுகை வேண்டும்

அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஏ.அன்பழகன் கூறும் போது, 'போக்குவரத்து துறையில் ஆட்கள் பற்றாக்குறை, டயர் உள்ளிட்ட அனைத்து உதிரி பாகங்களும் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதுவும் குறிப்பாக கொரோனாவிற்கு பிறகு அனைத்து உதிரிப் பாகங்களின் விலைகளும் உயர்ந்துவிட்டன. முன்பு எல்லாம் புதிய பஸ் ஒன்றை ரூ.35 லட்சத்தில் வாங்கிவிட முடியும். ஆனால் தற்போது புதிய பஸ் ரூ.75 லட்சமாக உயர்ந்து உள்ளது. அதேபோல் வாகனங்களுக்கு சாலை வரி என்ற ஒன்றுதான் முன்பெல்லாம் இருந்தது. ஆனால் தற்போது மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணமும், மாநில அரசு சாலை வரி என 2 வரிகளை வசூலிக்கின்றன. இதனால் நாளுக்கு நாள் போக்குவரத்து தொழில் நலிவடைந்து வருகிறது. வேறு வழியில்லாமல் 'புலிவாலை பிடித்த கதையாக' இந்தத் தொழிலை விடவும் முடியாமல் தொடரவும் முடியாமல் தவித்து வருகிறோம். மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்காக 2 ஆண்டுகள் வரி சலுகைகள் வழங்குவது போல், போக்குவரத்து தொழில் ஆரோக்கியமாக நடக்க மத்திய, மாநில அரசுகள் டீசல் மற்றும் வரிகளில் சலுகைகள் வழங்கி தொழிலை காக்க வேண்டும். அத்துடன் கார் போக்குவரத்து பயன்பாட்டை குறைத்து வெளிநாடுகள் செய்வது போல் பொதுப்போக்குவரத்தை ஊக்குவித்து அடுத்த தலைமுறையினருக்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழல் கொண்ட சமுதாயத்தை படைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்றார்.

வேலை நிறுத்த போராட்டம்

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ்:-

தமிழகத்தில் லாரி போக்குவரத்து தொழில் கடந்த 5 ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டீசல், இன்சூரன்ஸ், சுங்ககட்டணம், டயர் விலை உயர்வால் லாரிகளை தொடர்ந்து இயக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். லட்சக்கணக்கில் வங்கிகளில் கடன் பெற்று லாரிகளை வாங்கி தொழில் செய்து வந்தோம். தற்போது தொழில் இல்லாததால் லாரிகள் முடங்கி கிடப்பதோடு மாத தவணையும் சரியாக செலுத்தமுடியவில்லை. தற்போது லாரி உள்ளிட்ட வாகனங்களின் வரி உயர்வால் என்ன செய்வதென்று தெரியவில்லை. வரி உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மற்ற தொழிலை மாதிரி இல்லை. முன்கூட்டிய வரியை செலுத்திய பிறகு தான் லாரியை இயக்க முடியும். வாகனங்களின் வரி உயர்வு சம்பந்தமாக நாமக்கல்லில் 19-ந் தேதி நடக்கும் சங்க ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளோம். அதன்பிறகு எங்களது முடிவை அறிவிப்போம். அது வேலை நிறுத்த போராட்டமாக கூட இருக்கலாம்.

தொழிலாளர்களை பாதிக்கும்

தர்மபுரி குமாரசாமிப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வேலு:-

இப்போது ஒவ்வொரு வீட்டிலும் இருசக்கர வாகனம் உள்ளது.இதனால் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகன தொழில் நலிவடைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக டீசல் விலை மிகவும் அதிகரித்து விட்டதால் எங்களைப் போன்ற தொழிலாளர்கள் இந்த தொழில் மூலம் கிடைக்கும் வருவாயில் கணிசமான பகுதியை டீசலுக்கு செலவழிக்க வேண்டிய சூழல் உள்ளது. ஏற்கனவே பசுமை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை செலுத்தி வருகிறோம். அடிக்கடி விதிக்கப்படும் அபராதங்களும் எங்களுக்கு பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. தற்போது புதிய வாகனங்கள் மற்றும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வாகனங்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு எங்களைப் போன்ற தொழிலாளர்களை பாதிக்கும். எனவே இந்த கூடுதல் வரிவிதிப்பை திரும்ப பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்புடையதல்ல

அத்திமுட்லுவை சேர்ந்த வக்கீல் செந்தில்:-

போக்குவரத்து பயன்பாட்டிற்காக அதிக வருவாய் இல்லாத சாதாரண மக்களும் தற்போது இருசக்கர வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். தொடர்ச்சியாக அதிகரிக்கும் பெட்ரோல் விலை உயர்வு ஏழை நடுத்தர மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. இந்த நிலையில் வாகனங்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். கணிசமானவர்கள் கடனை தவணை முறையில் செலுத்தும் வகையில் வாகனங்களை வாங்குகிறார்கள். இவர்களுக்கு கடன் சுமை மேலும் அதிகரிக்கும். ஏற்கனவே பயன்படுத்தும் பழைய வாகனங்களுக்கும் வரிவிகிதத்தை அதிகரிப்பது ஏற்புடையதல்ல. எனவே பழைய வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும்.

மறுபரிசீலனை

மாரண்டஅள்ளியை சேர்ந்த வாடகை வாகன உரிமையாளர் ராஜசேகர் :-

டீசல் விலை உயர்வு காரணமாக சரக்கு வாகனங்கள், டிராவல்ஸ் வாகனங்கள்ஆகியவற்றை இயக்குபவர்கள் ஏற்கனவே கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். இந்த நிலையில் புதிய வாகனங்களை வாங்கும் போது கூடுதல் வரி விதிப்பு இந்த தொழிலில் இருப்பவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வரி உயர்வால் கூடுதல் வாடகை வசூலிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்போது அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வு சாதாரண மக்களை பாதிக்கும். இதேபோல் பழைய வாகனங்களுக்கும் கூடுதல் வரிவிதிப்பு வாகனஉரிமையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். எனவே இந்த கூடுதல் வரிவிதிப்பை மறுபரிசீலனை செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story