'டாட்டூ'-இளைஞர்களின் பச்சைகுத்தும் மோகம்அழகானதா? ஆபத்தானதா?
டாட்டு-இளைஞர்களின் பச்சை குத்தும் மோகம் அழகானதா அல்லது ஆபத்தானதா என்பது குறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகளை பார்ப்போம்.
டாட்டூ. இந்த சொல் இன்றைய இளைஞர்களின் மந்திர சொல்லாக மாறி வருகிறது. ஆன்ட்ராய்டு போன் இல்லாத இளைஞர் ஒருவரை கூட காண முடியாது என்ற ரீதியில் தான் இன்றைய டாட்டூ மோகமும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
பச்சை குத்துதல்
நமது தாத்தா, பாட்டி போன்ற மூதாதையர்கள் காலத்தில் பச்சை குத்திக்கொள்வது என்பது நம் நாட்டின் பாரம்பரிய பழக்க வழக்கங்களில் ஒன்றாக இருந்துள்ளது. குறிப்பாக அந்த காலத்து பெண்கள் தங்கள் கணவர் பெயரை கூறக்கூடாது என்பதற்காக அதை கைகளில் பச்சை குத்திக்கொள்வதை வழக்கமாக கொண்டு இருந்தனர். யாராவது கணவர் பெயரை கேட்டால் அந்த கால பெண்கள் கையை காட்டுவார்கள்.
இது மாற்றம் பெற்று அடுத்து வந்த காலக்கட்டங்களில் கணவர் பெயரை பச்சை குத்தும் நடைமுறை சடங்கு, சம்பிரதாயமாக மாறி போய் இருந்தது. பின்னர் படிப்பறிவு, நாகரிக வளர்ச்சியால் பழங்கால பச்சை குத்தும் மரபு குறைய தொடங்கியது. பெண்கள் தங்கள் கணவர் பெயரை கூறுவதற்கு தயக்கம் காட்டும் நிலை கடந்து போனது. இவ்வாறு பழங்கால பச்சை குத்தும் நடைமுறை குறைந்து போன அதேவேளையில், அது இன்றைக்கு கால மாற்றத்தில் மேற்கத்திய கலாசாரம் என்ற பெயரில் டாட்டூவாக புது வடிவம் பெற்று விட்டது.
நடிகர், நடிகைகள்
இந்தியாவில் பிரபலமாக பல பாலிவுட் பிரபல நடிகர், நடிகைகள் தங்கள் காதலர்கள் பெயரை டாட்டூவாக குத்திக்கொண்டது டாட்டூவின் மீது இளைஞர்கள் குறிப்பாக இளம்பெண்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கியது என கூறலாம். இன்றைய காலக்கட்டத்தில் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டு வீரர்கள் என்று பலரும் டாட்டூ குத்திக்கொண்டு டாட்டா காட்டுவது ஒரு ஸ்டைலாக தான் மாறி விட்டது.
குறிப்பாக இளம்பெண்கள் தங்கள் அழகுக்கு அழகு சேர்க்க மெகந்தி இடுவதையும், டாட்டூ (பச்சை குத்துதல்) வரைந்து கொள்வதையும் நாகரிகத்தின் அடையாளமாக பார்க்கிறார்கள். முதலில் பெயரை மட்டுமே டாட்டூ குத்திய இளைஞர்கள், இளம்பெண்கள் தற்போது கை, கால் தொடங்கி உடலில் பல்வேறு இடங்களில் விதவித வண்ணங்களில் டாட்டூஸ் வரைவது தற்போது பேஷனாகி விட்டது.
அழகானதா? ஆபத்தானதா?
இந்த டாட்டூ குத்துவது பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். டாட்டூ கிரைன்லோமா, டாட்டூ ட்யூபர்க்ளோசிஸ், டாட்டூ சர்காயடேசிஸ், பங்கல் இன்பெக் ஷன் போன்ற பல விதமான தோல் நோய்கள் இந்த டாட்டூவால் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இளைஞர்களின் டாட்டூ மோகம் அழகானதா? அல்லது ஆபத்தானதா? என்று இளைஞர்கள், டாக்டர்கள் கூறிய கருத்துளை காண்போம்.
தேனியை சேர்ந்த தோல் சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் மாதவ் பிரவீன்: உடலில் டாட்டூ வரைந்து கொள்ளும் ஆசை தற்போது இளைஞர்களிடையே பரவலாக ஏற்பட்டு வருகிறது. நானும் எனது கையில் டாட்டூ வரைந்துள்ளேன். டாட்டூ வரையும் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். டாட்டூ போடும் நபர் முறையான பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளாரா? டாட்டூ வரைய பயன்படுத்தும் கருவிகள் தூய்மையாகவும், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைளுடன் உள்ளதா? என்று பார்க்க வேண்டும். டாட்டூ வரைந்தால் அலர்ஜி ஏற்படுகிறதா? என்று பார்க்க வேண்டும்.
புற்றுநோய் பாதிப்பு
பென்சிலின் ஊசி போடும் முன்பு அதனால் அலர்ஜி ஏற்படுமா? என்று சோதித்துப் பார்ப்பார்கள். அதுபோல், ஒரு புள்ளி வடிவில் டாட்டூ போட்டுப் பார்த்து 12 மணி நேரத்தில் அலர்ஜி எதுவும் ஏற்படுகிறதா என்று பார்க்க வேண்டும். அதன்பிறகு டாட்டூ வரைவது பாதுகாப்பானது. வரைந்த இடத்தில் வீக்கம், தோல் உரிதல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக தோல் மருத்துவ சிகிச்சை நிபுணரை சந்தித்து உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
தோல் அலர்ஜி ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். அலட்சியமாக இருந்தால் அது புற்றுநோய் பாதிப்பையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பல்வேறு நிறங்கள் மற்றும் ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட டாட்டூவை வரைந்து கொள்ளும்போது தோலில் அலர்ஜி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பெற்றோர் சம்மதம்
தேனியை சேர்ந்த டாட்டூ வரையும் கலைஞர் ஜெயன்: நான் முறையான பயிற்சி பெற்று, சான்றிதழ் பெற்று டாட்டூ வரைந்து வருகிறேன். இன்றைய இளைஞர்கள், இளம்பெண்களிடம் டாட்டூ மோகம் அதிகரித்துள்ளது. டாட்டு வரைய பயன்படுத்தும் கருவியானது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதை முறையான பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான முறையில் பயன்படுத்துகிறேன். பள்ளி, கல்லூரி மாணவர்கள் டாட்டூ வரைய வேண்டும் என்று வந்தால், அவர்களின் பெற்றோர் சம்மதம் பெற்ற பிறகே வரைகிறேன்.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் டாட்டூ வரைய வந்தால் அவர்களின் டாக்டர்களிடம் ஒப்புதல் வாங்கிய பிறகே வரைவதை வழக்கமாக கொண்டுள்ளேன். காதல் ஜோடிகள், புதுமணத் தம்பதிகள் ஜோடியாக டாட்டூ வரைய வருவார்கள். அவர்கள் விரும்பிய விதத்தில் வரைந்து கொடுக்கிறேன்.
அழிப்பது எப்படி?
சிலர் புகைப்படத்தில் இருப்பது போல் வரைய வேண்டும் என்பார்கள். அதையும் நேர்த்தியாக செய்கிறோம். டாட்டூ வரைந்த பிறகு தன்னம்பிக்கை அதிகரித்து இருப்பதாகவும், தங்களை மாடர்னாக உயர்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
முக்கியமாக ஒவ்வொருவருக்கும் புதிய ஊசியை தான் பயன்படுத்துகிறோம். முகம் உள்ளிட்ட பெரிய டாட்டூஸ் வரைவதற்கு சுமார் 4 மணி நேரம் வரை ஆகும். குத்தும் போது லேசாக வலி இருக்க தான் செய்யும். அதன்பிறகு வலி குறைய தொடங்கி விடும். இன்றைய காலக்கட்டத்தில் பிரேக்கப்பிற்கு பிறகு காதலன் அல்லது காதலின் பெயர் உள்ள டாட்டூவை அழிக்க வேண்டும் என்றால் லேசர் உள்ளிட்ட பலவகையான சிகிச்சை முறைகள் உள்ளன. இதனால் பலர் எவ்வித பயமோ, தயக்கமோ இன்றி உடலில் தாங்கள் விரும்பும் இடங்களில் பிடித்தமான டிசைன்களில் டாட்டூ குத்தி கொள்கின்றனர். மேலும் அவற்றை அழிப்பதற்கு பதிலாக அதிலேயே வேறு ஒரு டிசைனை வரைந்து அதை மறைக்க முடியும். முறையாக பயிற்சி பெற்றவர்களிடம் டாட்டூஸ் குத்தினால் உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
கால்பந்து
தேனியை சேர்ந்த பட்டதாரி ராஜேஷ்: நான் உடலில் 2 டாட்டூ வரைந்துள்ளேன். பெற்றோர் அன்பின் பிரதிபலிப்பாக தாய், தந்தை என்பதை ஆங்கிலத்தில் வரைந்துள்ளேன். கல்லூரி படிக்கும் போது கால்பந்து விளையாட்டில் ஆர்வம் அதிகம். பல போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். அதனால் கால்பந்து வடிவத்தை டாட்டூவாக வரைந்துள்ளேன். தற்போது பெண்கள், இளைஞர்கள் உள்பட பலர் டாட்டூ வரையும் கலாசாரத்தை பின்பற்றி வருகின்றனர். வருங்காலங்களில் டாட்டூ கலாசாரம் மேலோங்கி தான் இருக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை.
டாட்டூ குத்தும் ஒரு வாரத்திற்கு முன்பே நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். முக்கியமாக டாட்டூ வரையும் கலைஞர்கள் புதிய ஊசியை தான் பயன்படுத்துகிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் வேறு யாருக்காவது பயன்படுத்திய ஊசியை பயன்படுத்தினால் அது தீவிரமான வைரஸ் தொற்றுக்களை உண்டாக்க வாய்ப்புள்ளது. எனவே டாட்டூ குத்தும் போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.
உப்புக்கோட்டையை சேர்ந்த ஆகாஷ்குமார்:- டாட்டூ வரைவது இன்றைய இளைஞர்களிடம் ஒருவித நாகரிகம் போல் மாறிவிட்டது. நானும் எனது கையில் அம்மா, அப்பாவின் பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் டாட்டூ வரைந்துள்ளேன். கையில் கடிகாரம் கட்டிய பிறகு தோற்றத்தில் ஒரு மாற்றம் உருவாகும். அதுபோல், டாட்டூ வரைந்த பிறகும் ஒரு மாற்றத்தை உள்ளுக்குள் உணர்கிறேன். பலரும் டாட்டூ வழியாக தனது அன்பை வெளிப்படுத்துகின்றனர். அன்பின் வெளிப்பாடாக மாறி டாட்டூ இன்னும் பல காலம் பல்வேறு வடிவங்களில் வளரத்தான் செய்யும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வலி, வேதனை கலந்த டாட்டூ
டாட்டூ மோகம் இளைஞர்களை ஆட்டிப்படைக்க சினிமா நடிகர், நடிகைகள் முக்கிய காரணம் என்றாலும் இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் தங்கள் அன்பை குறிப்பாக காதலை வெளிப்படுத்த டாட்டூ குத்திக்கொண்டு சிக்கலிலும் சிக்கி கொள்கிறார்கள். தங்களுக்கு காதலன், காதலி பெயரை உடலில் டாட்டூவாக குத்திக்கொண்டு பின்னர் காதல் கைகூடாத போது அந்த டாட்டூவை அழிக்க முடியாமல் இன்னலுக்கு உள்ளாகிறார்கள்.
லேசர் தெரபி எனப்படும் சிகிச்சை மூலம் டாட்டூவை அழித்து விடலாம் என்றாலும், வலியும், வேதனையும், அதை அழிக்கும் சிகிச்சை முறையால் நோய் பாதிப்பு என்றும் ஆபத்துகள் அதிகமாகவே உள்ளதை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் வெளிநாடுகளில் உள்ளதை போன்று டாட்டூ மையங்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட நடவடிக்கை எடுத்தால் நோய் பாதிப்பில் இருந்து டாட்டூ போட்டு கொள்பவர்கள் தப்பிக்கும் வாய்ப்பும் உள்ளது.