பரமக்குடியில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது-நகர்மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் பேச்சு
பரமக்குடியில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது என்று நகர்மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் கூறினார்.
பரமக்குடி,
பரமக்குடியில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது என்று நகர்மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் கூறினார்.
நகர்மன்ற கூட்டம்
பரமக்குடி நகர்மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் சேதுகருணாநிதி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் குணசேகரன், ஆணையாளர் திருமால் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் மீரா அலி வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர் அப்துல் மாலிக் பேசுகையில், பரமக்குடி நகராட்சிக்கு வர வேண்டிய வரிப்பாக்கி ரூ.7½ கோடி உள்ளது. இதனால் வளர்ச்சி திட்ட பணிகள் பாதிக்கப்படுகிறது. நகராட்சி ஊழியர்களை அனுப்பி வரி வசூலை துரிதப்படுத்த வேண்டும் என்றார். அ.தி.மு.க.கவுன்சிலர் வடமலையான் பேசுகையில், பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது. ஏற்கனவே குடியிருப்பு பகுதிகளில் இருந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் கிருஷ்ணா தியேட்டர் பகுதி, சந்தகடை பகுதி, பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப் போவதாக தெரிகிறது. ஆகவே அதற்கு நகர்மன்றம் அனுமதி வழங்கக் கூடாது என்றார்.
சிறப்பு தீர்மானம்
அதற்கு நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி இதற்கு சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். நகர் மன்ற அனுமதி பெற்ற பின்பு தான் டாஸ்மாக் கடைகள் வைக்க வேண்டும் என்றார்.
கவுன்சிலர் ஜூவ ரெத்தினம் பேசுகையில், பரமக்குடி நகராட்சியில் தமிழ் வாழ்க என்ற பெயர் பலகை இல்லாமல் உள்ளது. அதை உடனடியாக வைக்க வேண்டும் புதிய வரிகள் போடுவதை துரிதப்படுத்த வேண்டும் என்றார்.
கவுன்சிலர் கிருஷ்ணவேணி பேசுகையில், குப்பை வண்டிகள் பழுதாகி இருப்பதால் சரியாக குப்பைகளை அள்ளுவதில்லை. குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுகிறது என்றார்.
கவுன்சிலர் சிகாமணி பேசுகையில் 3-வது வார்டில் இதுவரை ஒரு வேலை கூட நடைபெறவில்லை. நகர் மன்ற உறுப்பினராகி 9 மாதம் ஆகிவிட்டது. மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்றார். தலைவர் சேது கருணாநிதி கூறுகையில், வைகை நகர் பகுதியில் அனைத்து தெருக்களிலும் ஏற்கனவே சாலைகள் போடப்பட்டுள்ளது. வாருகால் வசதி விரைவில் செய்து கொடுக்கப்படும் என்றார்.