தார்சாலை அமைத்து தர வேண்டும்மலைவாழ் மக்கள், கலெக்டரிடம் மனு
கொல்லிமலை குண்டூர்நாடு ஊராட்சிக்கு உட்பட்ட மலைவாழ் மக்கள் நேற்று தார்சாலை வசதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கலெக்டரிடம் மனு
கொல்லிமலை குண்டூர்நாடு சுண்டக்காடு அருகே உள்ள பள்ளிக்காட்டுபட்டியை சேர்ந்த மலைவாழ்மக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் உமாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
குண்டூர்நாடு சூக்கலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கூட்டுறவு சங்கம், வங்கி மற்றும் வருவாய்துறை சான்றிதழ்கள் பெற பஸ்சில் சுமார் 55 கி.மீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இதேபோல் திண்டூர்பட்டி, நத்துக்குழிப்பட்டி, சுண்டக்காடு, ஊர்மலை, தீவெட்டிக்காடு, திரிகூடல்பட்டி பகுதிகளில் விளையும் விளை பொருட்களை நாகநல்லூர், தம்மம்பட்டி மற்றும் கொப்பம்பட்டி பகுதிகளுக்கு தலையில் சுமந்து செல்லும் அவலநிலை உள்ளது.
எனவே பள்ளிக்காட்டுபட்டி முதல் சூக்கலாம்பட்டி வரை பட்டா நிலத்தில் உள்ள 4 கி.மீட்டர் மண்சாலையையும், தரிசு நிலத்தில் உள்ள 3 கி.மீட்டர் தூரம் கொண்ட பாதையையும் தார்சாலையாக மாற்றி தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
ஓய்வூதியம் வழங்க கோரிக்கை
இதேபோல் நாமக்கல் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்ட தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தையல் தொழிலாளர், வீட்டு பணியாளர், சுமை பணியாளர், தெரு ஓர வியாபாரிகள், புகைப்பட கலைஞர் போன்ற பணிகளை செய்து வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
இதர பணபயன்களும் நிலுவையில் உள்ளது. எனவே நிலுவையில் உள்ள ஓய்வூதியம் மற்றும் பண பயன்களை அரசிடம் வலியுறுத்தி பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொழிலாளர்களுக்கான உதவிகளை உடனடியாக வழங்காத பட்சத்தில் தொழிலாளர்களை திரட்டி போராட்டம் நடத்துவது என முடிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.