ரூ.1 கோடிக்கு கதர் விற்பனை செய்ய இலக்கு
ரூ.1 கோடிக்கு கதர் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
காந்தி ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா தென்காசி அருகே உள்ள இலஞ்சியில் கதர் விற்பனை மையத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் கலந்துகொண்டு காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், "காந்தியடிகளால் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டுமென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடாக 1 கோடியே 5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை அடைந்திட பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அனைவரும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
விழாவில் தென்காசி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் மாரிமுத்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், மாவட்ட குடிசை தொழில் ஆய்வாளர் குமரன், கதரங் காடி மேற்பார்வையாளர் குமரேசன், மேலாளர் ஹென்றிஜோசப், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், இலஞ்சி பேரூராட்சி தலைவி சின்னத்தாய், துணைத்தலைவர் முத்தையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.