சுற்றுலா தலங்களில் டேன்டீ தேயிலைத்தூள் விற்பனை


சுற்றுலா தலங்களில் டேன்டீ தேயிலைத்தூள் விற்பனை
x
தினத்தந்தி 1 Oct 2023 1:30 AM IST (Updated: 1 Oct 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சுற்றுலா தலங்களில் டேன்டீ தேயிலைத்தூளை விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

நீலகிரி

தமிழகத்தில் சுற்றுலா தலங்களில் டேன்டீ தேயிலைத்தூளை விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு வந்தார். அவர், டேன்டீ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேயிலைத்தூள் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து அதிகாரிகள் விளக்கினார்கள். அதன்பின்னர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் மதிவேந்தன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அமைச்சர் உறுதி

அதில், தேயிலை தோட்ட தொழிலாளர் சம்பள பிரச்சினை, குடியிருப்பு வசதி, டேன்டீயை லாபத்தில் இயங்க வைப்பது, ஓய்வு பெற்ற டேன்டீ ஊழியர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி வீடு கட்டி கொடுப்பது, ரேஷன் கடைகளில் டேன்டீயில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூளை விற்பனை செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் உறுதி அளித்தார்.

தேயிலைத்தூள் விற்பனை

கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் மதிவேந்தன், நிருபர்களிடம் கூறியதாவது:-

மூடப்பட்ட டேன்டீ தொழிற்சாலைகளை ஆய்வு செய்தேன். அந்த தொழிற்சாலைகளை மீண்டும் நடத்த முடியுமா?, அங்குள்ள எந்திரங்களை மீண்டும் பயன்படுத்த முடியுமா? என்று ஆலோசிக்கப்படும்.

தற்போது இயங்கி கொண்டு இருக்கும் டேன்டீ தொழிற்சாலைகளை எவ்வாறு லாபத்தில் இயங்க வைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் ரேஷன் கடை மற்றும் சுற்றுலா தலங்களில் டேன்டீ தேயிலைத்தூளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story